Sunday 27 April 2014

நலமாக அமைய...

கேட்டீர்களா...
"நூலைப் போல சேலை
தாயைப் போல சேய்" என்று!
கேளுங்கோவேன்...
"பாலைப் போல வெள்ளை
செயலைப் போல அறிவு" என்று!
பார்த்தீர்களா...
"தேடல் உள்ள வரைக்குந் தான்
பெருக்கிக் கொள்ளலாம் அறிவு" என்பதை!
பாருங்கோவேன்...
"முயற்சி உள்ள வரைக்குந் தான்
வெற்றி எம்மை நாடி வரும்" என்பதை!
அறிந்தீர்களா...
"கேட்பதும் பார்ப்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய்" ஆகுமென!
அறியுங்கோவேன்...
"கற்றலும் அறிதலும் முயற்சி
கற்பிப்பதும் அறிவிப்பதும் பயிற்சி" ஆகுமென!
உணர்ந்தீர்களா...
"அப்பனும் அம்மையும் கூடி
உறவுக்கும் ஊருக்கும்
மக்களுக்கும் நாட்டுக்கும்
நற்பணி செய்வதற்கே
எம்மைப் பெற்றது" என்றறிக!
உணருங்கோவேன்...
"ஆணும் பெண்ணும் கூடி
நன்மக்களைப் பெற்றால் போதாது
நல்லறிவைப் புகட்டி
நல்லொழுக்கம் பேணி
ஆளுமை நிறைந்தவர்களாக ஆக்கினாலே
நாளைய தலைமுறை மட்டுமல்ல
தாயக மண்ணும் நலமாக அமைய" என்றறிக!

Friday 25 April 2014

கணினி பழுதடைந்த பின்னே...

அடே! மச்சான்! அடி! தோழி!
எனக்கொரு மடிக்கணினி (Laptop) - 2011 இல்
மச்சாளும் மச்சானுமாய்க் கொடுத்து உதவினாங்க...
அப்பவெல்லாம் - நான்
மடிக்கணினி (Laptop) பழுதடைந்துவிட்டால்
பாதிப்பு என்னவாகுமென்று
எப்பனும் எண்ணிப்பார்க்கவில்லையே!
2014 சித்திரையாள் வந்தாள் - என்
மடிக்கணினியும் (Laptop) பழுதாச்சு...
பட்டினி வயிற்றோடு
பலதும் பத்தும் எண்ணிப்பார்த்து
என்னாலே இயலாமல் போயிற்றே!
தொழில்நுட்பவியலாளரிடம் நீட்டினால்
ஆளை விக்கிற விலையில
திருத்தச் செலவென்றார்...
எனது எல்லாத் தகவலையும்
மீளநிரப்ப (Backup எடுக்க) முடியல...
எனது வலைச்சேமிப்பில (Online Drive இல)
வைப்பிலிட்ட தகவல் தான்
ஈற்றில் எனக்கு உதவிச்சே!
என்ன தான் இருந்தாலும்
பணத்தை ஈந்து கணினியை மீட்டு
விட்ட, தொட்ட இடத்தில இருந்து
எல்லா வலைப்பூக்களையும்
மீள நடாத்த வந்தாச்சு உறவுகளே!
எப்படியோ
கணினி இயங்கிய வேளை
கிட்டாத அறிவு எல்லாம்
கணினி இயங்க மறுத்த வேளை
கற்றுக்கொள்ள வேண்டியதாச்சே!

Tuesday 8 April 2014

பள்ளிக்குச் செல்லும் சுமைதாங்கிகள்

பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. தெருப் பேச்சாளர்கள் பிள்ளைகளைப் பார்த்து என்னமோ சொல்கிறாங்களே! கொஞ்சந்தான் கேட்டுப் பார்ப்போமே!
முகத்தார் : அங்கே பாரு, ஒரு பிள்ளை ஒல்லிப் பொதியும் ஒரு பிள்ளை பூசணிக்காய் போல பெரிய பொதியும் பள்ளிக்குச் சுமந்து போறாங்களே...

சிவத்தார் : பட்டினத்துப் பள்ளிக்குப் போறவை ஒல்லிப் பொதியும் நம்மூர்ப் பள்ளிக்குப் போறவை பெரும் பொதியும் சுமப்பினமே!

முகத்தார் : ஆட்களோ எலும்புந் தோலுமாக, பொதிகளோ ஆட்களை விடப் பெரிசே...

சிவத்தார் : எட்டுப் பாட வேளையும் பட்டென்று எடுத்துப் படிக்க வேண்டிய நூல்கள் தான்...

முகத்தார் : சின்னப் பொதிப் பட்டினத்துப் பிள்ளைகள், நம்மூர்ப் பிள்ளைகளைப் போல படிக்கிறெல்லையே?

சிவத்தார் : ஒல்லிப் பொதிக்குள்ள மடிக் கணினியடா (notebook)... எழுதிக்
கிறுக்காமல் படிக்கத்தான்...

முகத்தார் : குழந்தை குட்டிகளைப் பெத்துப்போட்டு, பள்ளிக்குப் பொதி சுமக்க விடுகிறதோ கணினியைக் கொடுத்து கையெழுத்துப் போடத் தெரியாமல் பண்ணுறதோ நல்லாயில்லைப் பாருங்கோ...

சிவத்தார் : படிப்பிக்கிற ஆட்கள் பள்ளியில படிப்பிக்காமல், பிள்ளைகள் சுமந்து சென்றதை விரித்து வாசிக்க வைச்சுப்போட்டு வீட்டை கலைக்கிறாங்களே...

முகத்தார் : ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா! இஞ்ச கொஞ்சம் வாப்பா! சின்னஞ் சிறிசுகள் படுகிற பாட்டை பாரப்பா...

சிவத்தார் : ஆண்டவன் வரமுதல்ல... நான் போட்டு வாறேனே...

அரசே! மின்வெட்டு வேண்டாமப்பா!

பள்ளியில் பணிகளும் தொடரவே தொடங்க
பிள்ளையே படிக்கவே தொடங்கிற நேரமாக
நிறுவனப் பணிகளும் தொடங்கிற வேளையிலே
தொட்டேனே கணினியை நிகழ்நிரல் எழுதவே
தொட்டவர் கருவியைத் தலைமுடி குறைத்திட
மரவரி தொழிலாளி அரியவே தொடங்க
மருத்துவர் எடுத்தார் கத்தியை அறையிலே
அவளைய் வெட்டியே குழந்தையே வெளியேற
உழவனே வயலில் நீர்விடத் தொடங்க
தண்ணீர் பாய்ச்சிற கருவியை அழுத்திட
எட்டைத் தாண்டிய காலைவேளை எவரும்
எடுத்தது தொடுத்தது முழுக்கவே நிறுத்திட
நமக்கு மின்தடை எரிச்சலைத் தருமே!
பாருங்களேன் அரசுமே பாராமலே இருந்திட
நம்மாளு படுகிற நெருக்கடி தீருமோ?
மின்தடை வரும்வேளை பெருகிற எரிச்சலே
நமக்கு உள்ளேயே மோதலைத் தூண்டுதே...
ஐயையோ! ஆட்சியை நடத்துவோர் அறியணும்
மக்களே கிளர்ந்தெழ அரசாள முடியுமோ
மின்தடை தொடருற அரசே!

நாட்டுக்குத் தலையிடி தான்!

ஏதுமற்ற ஏழைகள்
கண் கண்ட பொது இடத்தில்
கண் மூடித் தூங்குவதோடு
மூடு மறைப்புக்குள்
குடும்பமும் நடாத்துவர்!
ஆட்சியாளர்
கண்களுக்குத் தெரியாதா...
தெரிந்தாலும் பாராமுகமா...
இந்த ஏழைகள்
சிசுக்கொலை செய்யாமல்
நாட்டில் பெருக...
நாளைய விடியலில்
நாட்டுக்குத் தலையிடி தான்!

தெருவிலே பிள்ளைகள்... பள்ளியோ எட்டுக்கு...

சின்னாளு சுமக்கிற பொதியைப் பார்த்தால்
பள்ளியில் படிக்கிற மாதிரித் தெரியேல
ஆட்களோ மெலிவு தோள்களில் கிடப்பதோ
ஆட்களை விடப்பெரும் பொதிகளாய் கிடக்குதே
ஊர்தியில் பொதிக்கு வேண்டுமே இருக்கை
பார்த்துப் பார்த்து ஓட்டுநர் நிறுத்தாமல்
செல்கிற பொழுதில சிறுவர் செல்லாமல்
பள்ளி எட்டாகத் தொடங்குதே!

Saturday 5 April 2014

எப்பவெல்லாம் தோன்றும்...

உடனுக்குடன்
எல்லாம் தெரிந்து விட
நம்மாளுகள் எவரும்
கடவுள் அல்ல!
வயிறு கடிக்கும் போதே
பசியைத் தெரிந்து கொள்கிறான்
பசியைப் போக்க நினைக்கையிலே
வருவாயீட்டத் தெரிந்து கொள்கிறான்
நாலுகாசு கையில் இருக்கையிலே
செலவு செய்யத் தெரிந்து கொள்கிறான்
கட்டுப்பாடு இல்லாத வேளை
(சுதந்திரமாக உள்ள போது தான்)
தவறு செய்யத் தெரிந்து கொள்கிறான்
தவறு செய்யும் போது தான்
நன்மை, தீமை எதுவென
நம்மாளுகள் மறந்து விடுகின்றனரே!
தேவை வந்த போது தான்
தோழமையைத் தேடுகின்றார்
விருப்பம் வந்த போது தான்
உறவைப் பேணுகின்றார்
துன்பம் வந்த போது தான்
சூழலைப் படிக்கின்றார்
இன்பம் வந்த போது தான்
சூழலையே மறக்கின்றார்
சூழலை விட்டு ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தம்மையே உணருகின்றனரே!
சூழலே தம்மை ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தெளிவையே பெறுகின்றனரே!
தெளிவைப் பெற்ற பின்னர் தானே
எப்பவெல்லாம் தோன்றும்
எல்லாவற்றையும்
எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டால்
எதிர்காலமே இருளாகிவிடுமென்றே
நம்மாளுகளும் எண்ணிப்பார்க்கின்றனரே!

அதனால், நட்புக்கு அழுக்கு

பெண்ணே!
நான் கெட்டவன் என்றா
என்னை விட்டு ஒதுக்கினாய்
அதனால்
நான் துயரப்படவில்லை!
பெண்ணே!
நீ என்னை நெருங்க
நானும் ஒதுங்குகிறேன்
அதனால்
துயரப்பட்டுவிடாதே!
காலம் மாறிப் போனாலும்
எங்கள் மக்களையும் (சமூகம்)
இன்னும் மாறவில்லையே
அதனால்
இருவருக்கும் கெட்ட பெயரை
வழங்க முடியாமல் திணறுமே!
என் மனைவிக்கு
உன் மீது விருப்பம் தான்
அதனால் - நீயே
என் வீட்டுப் பக்கம் வரலாம்
என் மனைவி முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
உன் கணவனுக்கு
என் மீது விருப்பம் என்றால்
அதனால் - நானும்
உன் வீட்டுப் பக்கம் வரலாம்
உன் கணவன் முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
நல்ல நட்புக்கு மட்டுமல்ல
உள்ளத்து அன்பைப் பகிரவும்
தடுப்பு வேலிகள் இருக்க
வாய்ப்பில்லையே...
அப்படியேதும் இருந்து விட்டால்
அங்கே
நட்புக்கு அழுக்கு இருக்கிறதே!