Tuesday 30 December 2014

வறுமை

வறுமை என்பது
வாழ்க்கையை நடாத்த
ஏதுமின்றித் துயருறும் நிலையா?
வறுமை என்பது
கிடைக்க வேண்டியது
கிடைக்காமையால் ஏற்பட்டதா?
வறுமை என்பது
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா?
வறுமையை விரட்ட
முயலாமை இருந்ததா?
வறுமையைப் போக்க
வழிகள் கிட்டவில்லையா?
உடல்நலக் குறைவா
முடமான உடலா
தொழிலின்றி வறுமையை அணைக்க...
பாவலர்களே!
எங்கும் எதிலும் எப்போதும்
வறுமை இருப்பதாகப் பாடுவதை
நிறுத்துங்கள்...
வறுமையைப் போக்க
வழிகாட்டுங்கள்
வறுமையை விரட்டப் போராட
கற்றுக்கொடுங்கள்
வறுமை என்பது
மறுமையிலும் வாழ்வில் நெருங்க
இடமளிக்காமல் பாபுனையுங்களேன்!
பாவலர்களுக்கு வறுமையே
பாவன்மையை ஊட்டுமென்றால்
நம்மாளுகளை வறுமை நெருங்கினால்
நல்வாழ்வை அமைக்க
நெருங்கிய வறுமையும் வழிகாட்டுமே!
வறுமையால் சாவு
வறுமையால் பின்னடைவு
வறுமையால் மருத்துவராகவில்லை
வறுமையால் ஊரே ஒதுக்கியது
போதும் போதும் போதும்
வறுமை தந்த வெறுமையால்
இன்னும்
எத்தனையோ துயரச் செய்திகள்...
வறுமை தந்த துயரச் செய்திகளென
இனிமேலும்
எம் காதுக்கெட்டாமல் இருக்க
இனியொரு வழிசெய்வோம் வாருங்கள்!

வறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

Tuesday 23 December 2014

அடையாளம்

தேவை ஏற்பட்டால் மட்டுமே
நம்மாளுகள்
எதையாச்சும் எண்ணிப்பார்க்கிறார்கள்...
எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்...
உதவிகள் கிட்டும் வேளை
தேவைகள் ஏற்படாமல் போக
எண்ணிப்பார்க்க ஏதுமின்றி
கண்டுபிடிக்க ஏதுமின்றி
நம்மாளுகள் முட்டாளாகின்றனரே!
என்னைப் பொறுத்தவரையில்
கடவுள் போல வந்து உதவினார்களென
உதவியோருக்கும் நன்றி கூறுவேன்...
கடவுள் எம்மைப் படைத்தது போல
நானும்
ஏதாவது எண்ணிப் படைக்க வழிவிட்ட
உதவாதவர்களுக்கும் நன்றி கூறுவேன்...
ஏனெனில் - அது தான்
எனது அடையாளம் என்பேன்!

Friday 19 December 2014

மூடி வைக்க முடியுமா?

ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?

Saturday 13 December 2014

காதலும் பூக்களைப் போலவே!


பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ!
மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலே காலம் கடந்து பிரிவதற்கே!
பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!
பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!

பூவிற்கு இத்தனை பலமா?

காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
 
காற்றிலே மிதந்து வரும் மணம்
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
"பூக்கள்!"

Wednesday 10 December 2014

எப்பவும் நாங்கள்...

எப்பவும் நாங்கள்
எங்கட பக்கத்து நிலைமைகளை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட விருப்பங்களைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் விருப்பங்களை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட தேவைகளைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் தேவைகளை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் எதிர்பார்க்கும்
உதவுவோரையோ வருவாயையோ
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
இப்படி எல்லாம்
எண்ணிப் பார்க்கின்ற வேளை
உன்னைப் போல
உன் அயலானையும் விரும்பு (நேசி)
என்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை
எப்பவும் நாங்கள்
எண்ணிப் பார்ப்பதில்லையே!

Tuesday 9 December 2014

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஓர் ஏழலில் (வாரத்தில்) அவை தங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கித் தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் விரிப்பை அறிந்துகொள்ள முடியும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html

தங்களுக்கான பரிசு, சான்றிதழ் கிடைத்ததும் அவை பற்றிய கருத்துகளை நீங்கள் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் 2015 தைப்பொங்கள் நாள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளோருக்கு ஊக்கம் தருமென நம்புகிறேன்.

2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டி விரிப்புக் கீழ்வரும் தளத்தில் விரைவில் வெளிவரும்.
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/

2014 தீபாவளி நாள் கவிதைப் போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் தங்களுக்கும் தங்களைத் தெரிவுசெய்த நடுவர்களான பெரியோருக்கும் போட்டியை நடாத்திய ரூபன் குழுவினருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான போட்டிகள் வலைப்பூக்களில் நல்ல தமிழைப் பேணவும் சிறந்த படைப்புகள் வெளிவரவும் உலகெங்கும் தமிழைப் பரப்பவும் எனப் பல நன்மைகளைத் தருமென நம்புகிறேன். எனவே 2015 தைப்பொங்கள் நாள் சிறுகதைப் போட்டியில் எல்லோரும் பங்குபற்றுமாறு அழைக்கின்றேன்.

Thursday 4 December 2014

என் இனிய உறவுகளே!


எனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.

எல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Monday 24 November 2014

தீர்வு ஒன்று தேவை

இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!
பிள்ளைகளின் விருப்பறியாது
பிள்ளைகள் எப்படியாது வாழுமென
பிள்ளைகள் கரை சேர்த்தால் போதுமென
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள்
எப்பதான் பின்விளைவை உணருவார்களோ?
பிள்ளைகளுக்கு
மகிழ்வான வாழ்வமைத்துக் கொடுக்க
பெற்றோர்களுக்கு
கற்றுக்கொடுக்க முன்வாருங்களேன்!

Sunday 23 November 2014

காதலை விட நட்பே பெரிது...

நட்புக்குப் அகவை வேறுபாடில்லை.
காதலுக்கு ஒத்த அகவை வேண்டும்.
காதலை விட நட்பே எளிதில் மலரும்...

நட்புக்குப் பால் வேறுபாடில்லை.
காதலுக்கு எதிர்ப்பால் வேண்டும்.
காதலை விட நட்பே இலகுவானது...

நட்பு எல்லோருக்கும் பொதுவானது.
காதல் இருவருக்கு உரித்தானது.
காதலை விட நட்பே பெரிது...

Friday 21 November 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

Wednesday 19 November 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

வேறுபாடு

தோள் கொடுப்பவன் தான் தோழன்
தோள் கொடுப்பவள் தான் தோழி
"ள, ழ வேறுபாடு"
 
தோள் கொடுக்காதவன் தான் நடிகன்
தோள் கொடுக்காதவள் தான் நடிகை
"ள, ட வேறுபாடு"
 

Saturday 15 November 2014

மக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்


நம்ம காதலர்கள் சந்தித்தால் என்ன கதைப்பாங்க...

காதலி: சான்றிதழில் எழுதப்பட்டது பெற்றோர் இட்ட பெயர்!
       எங்கட நடத்தைகளை வைத்தே, மக்களாயம் (சமூகம்) கூப்பிடுதே!

காதலன்: எனக்குத் தெரியும்... நல்லதைச் சொல்வோரையும் நல்லதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) நல்லவரென்றே கூப்பிடுதே!

காதலி: அது போலத் தான்... கெட்டதைச் சொல்வோரையும் கெட்டதைச் செய்வோரையும் மக்களாயம் (சமூகம்) கெட்டவரென்றே கூப்பிடுதே!

காதலன்: உண்மை தான்! ஆனால், நண்பர்கள் பலர் இது பற்றி அறிந்திருக்கவில்லையே!

இவங்க இப்படி எல்லாம் நாடகம் ஆடுவாங்க என்று எனக்குத் தெரியாதே!

அழகும் பத்திரிகையும்


முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
 
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
 
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
 
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!

Friday 14 November 2014

நண்பர்களே! நண்பர்களே!

நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளலாமா?
தேர்வுகளிலும் போட்டிகளிலும்
படிப்பிலும் தொழிலும்
காதலிலும் வாழ்க்கையிலும்
வென்றவர்களுக்கு
கடவுள் வந்து உதவினாரா?
எம்மைப் படைத்த கடவுள் - ஒருபோதும்
எம்மை எட்டிப் பார்த்ததில்லையே!
எப்படி ஐயா
கண் முன்னே கண்ட எல்லோரும்
எதிலும் வெற்றி பெற முடிகிறது என்று
எண்ணிப் பார்ப்பதை விட
வெற்றி பெறத் தேவையானதை
எண்ணிப் பார்க்கலாமே!
விருப்பம் கொள்...
முயற்சி செய்...
பயற்சியைத் தொடரு...
"என்னால் முடியும்" என்று
தன்னம்பிக்கையுடன் இரு...
பிறரையோ பிறவற்றையோ
கணக்கில் எடுக்காது
உன் வழியை நீயே பார்...
கூப்பிடு தூரத்தில் தான் - உனக்காக
உன் வெற்றியே காத்திருக்கிறதே!
நம்பிக்கையைப் போர்க்கலனாக்கி
இவ்வுலகை வெல்லலாம்
இன்றே முன்னேறு...
வெற்றிகள் எல்லாம் - உன்
காலடியில் வந்து வீழுமே!
பிறரால் முடியுமென்றால்
என்னால் ஏன் முடியாதென
விடிய விடிய
உன்னையே நோவதை விட
உனக்குள்ளே
உறங்கிக்கொண்டிருக்கும்
புலமைகளைத் திறமைகளை
வெளியே கொண்டு வா - அவற்றை
வாங்கிக் கொள்ளத் தானே
இவ்வுலகமே காத்திருக்கின்றதே!
பறப்பதென்று - நீ
முடிவு செய்து விட்டால் - காற்றே
உனக்குச் சிறகாய் முளைக்க
உன் தன்னம்பிக்கையே
உனது வெற்றியின் இடத்துக்கே
உன்னைக் காவிச் செல்லுமே!
நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளாமல்
முன்னேறும் எண்ணங்களை
ஒழுங்குபடுத்துங்களேன்...
உங்களை வெல்லக் கடவுளும்
உங்களுக்குக் கிட்ட நெருங்காரே!

Tuesday 11 November 2014

கெட்ட, கேடு கெட்ட


வயிற்றுப் பசி போக்க
உழைக்கின்றோம்...
உழைப்பில்லாத வேளை
வயிற்றுப் பசி போக்க
முடியாது அழுகின்றோம்...
அழுதால் பசி போக்கலாமா?

உழைத்தால் தான்
பசி போக்கலாம் என்றால்
களவு எடுத்தலும் பிச்சை எடுத்தலும்
பிறர் விருப்பைப் போக்க
தன் உடலைக் கூலிக்கு விடுவதும்
(விலைப் பெண், விலை ஆண்)
உழைப்பு ஆகுமா?

பசி போக்கப் பணம் வேண்டுமெனில்
தமது
உள உழைப்பையோ
உடல் உழைப்பையோ
செய்ய முயற்சிக்கலாமே...
ஆனால்
மாற்றாருக்குத் தீங்கிழைக்காத
உழைப்பைத் தெரிவு செய்தீர்களா?

நடுத் தெருவில்
நான் கூடப் பிச்சை எடுக்கையில்
"அடே எருமைக்கடா - அந்த
எருமை கூட சூடு தணிக்க
சேற்றுக் குளியலை நாடுதே - நீ
உன் வயிற்றுப் பசி போக்க
ஒழுங்கான தொழிலைப் பாரடா!" என்று
தெரு வழியே சென்ற நல்லவர்
ஒரு வேளை உணவும் தந்து
தொழில் ஒன்றை ஒழுங்கு செய்தும்
இனிப் பிச்சை எடுத்தால்
சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று
எச்சரித்து வழிகாட்டியுமிருந்தாரே!

வழிகாட்டிகள் சொல்லியும் கூட
எந்தப் பக்கம் பார்த்தாலும்
கெட்ட, கேடு கெட்ட
தொழில் செய்வோர் தான்
கண்ணுக்கு எட்டுகிறார்களே...
"என்னடாப்பா
தொழிலில் கூட...
கெட்ட, கேடு கெட்ட தொழில் என்று
ஒன்றுமில்லையே" என்று
என் மூக்குடைக்க வாராதீர்கள்...
நற்பெயரைத் தரும்
சூழல் எம்மைப் போற்றும்
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்
தொழிலே
கெட்ட, கேடு கெட்ட
தொழில் இல்லையென்று சொல்ல வந்தேன்!

உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

நம்ம காளைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற வாலைகளுக்கு வலை விரித்தால் எவளாவது சிக்குவாளா? (குறிப்பு: பெண்களே, ஆண்களுக்குக் கழுத்தை நீட்டும் முன் சிந்தியுங்கள்.) காளைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான பெண்
  2. அழகான பெண்
  3. கிராமத்து பெண்
  4. நகரத்து பெண்
  5. பணக்கார பெண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய பெண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள பெண்
  8. எந்த ஆணிடமும் தகாத உறவு வைக்காத பெண்.
  9. அவள் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான ஆண்
  2. அழகான ஆண்
  3. கிராமத்து ஆண்
  4. நகரத்து ஆண்
  5. பணக்கார ஆண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய ஆண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள ஆண்
  8. எந்தப் பெண்ணிடமும் தகாத உறவு வைக்காத ஆண்.
  9. அவன் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.

Sunday 9 November 2014

கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!



நேற்று - நீ
என் அழகுத் தோழி!
முதலில்
ஓரடி உண்மையென
அடுத்து
மூன்றடியில் துளிப்பாவென (ஹைக்கூவென)
அதற்கடுத்து
ஐந்தடியில் குறும்பாவென (லிமரிக் என)
அடுத்தடுத்தும் பார்த்தேன்
அடி, அடியாக அடுக்கி
புதுப்பாவெனப் பல புனைந்து - உன்
பாப்புனையும் ஆற்றலை
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!
ஈற்றில்
உன் பாக்களின் வாசகனானேன் - அதனால்
உன் பெயரைக் கேட்க - நீயோ
கவிதா (பாதா) என்கிறாய் - நானோ
உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ
ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவரே!
இன்று - நீ
என் அறிவுத் தோழி!
"பெயரைக் கேட்கையிலே - அவள்
கவிதா (பாதா) என்றாள் - நானோ
கவிதையோ பாவோ எழுத
முடியாமையை உணர்ந்தே - அவளை
மறந்து போய்விட்டேனே!" என்று
பாப்புனைய வைத்துவிட்டாயே!

Friday 7 November 2014

எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?

படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
பொத்தகக் கடைகளிலே
செய்தித்தாள்கள்
நுழைவாயிலில் தூக்கில் தொங்கின...
அவ்வழியே
ஒரு கடையில் நுழைந்தேன்...
உள்ளே பல பொத்தகங்கள்
தூக்கில் தொங்கின...
"ஏன்
இவையெல்லாம்
தூக்கில் தொங்குகின்றன..." என்று
கடை உரிமையாளரிடம் கேட்டேன்...
"எவராவது
இவற்றை வேண்டுவார்களே
என்று தான்" என்றார்...
"வருவாய் நிறையக் கிட்டுதா?" என்றேன்...
"வாசிப்போர் எவருமின்மையால்
சோர்வு தான் நிறையக் கிட்டுகிறதே!" என்று
பதிலளித்த உரிமையாளர் முன்னே
"படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
எவருக்குமே வாசிக்கவே தெரியாதா?" என்று
நானோ
தலைச் சுற்றி விழுந்துவிட்டேன்!
வாசிப்பு
மனித அறிவைப் பெருக்கும் செயலே...
வாசிப்புப் பசிக்கு
பொத்தகங்களும் செய்தித்தாள்களுமே...
பள்ளிகளில் - இதெல்லாம்
ஒழுங்காகச் சொல்லிக் கொடுத்தால் தானே
பொத்தகக் கடைகளிலே வணிகம் நடக்கும்!
பொத்தகங்களையும் செய்தித்தாள்களையும்
வேண்டிச் சேர்த்தால்
நாலு பணம் வைப்பிலிட(சேமிக்க)
வாய்ப்பில்லையென
பெற்றதுகள் வேண்டிக் கொடுக்கவில்லையோ?
இந்தக் காலப் பிள்ளைகள்
இணையத்தில் படம் பார்க்கையிலே
வாசிப்பை மறந்து போயிட்டுதுகளோ?
யானை விலை ஒட்டக விலையென
அரசு
படிப்புப் பொருட்களுக்கு விலை ஏற்றியதாலோ?
இன்னும் நிறைய
எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதால்
என்னால்
"எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?" என்ற
பாவை(கவிதையை) புனைய இயலாமல்
இப்படியே நிறுத்திக் கொள்கின்றேன்!

Tuesday 4 November 2014

ஆண்டவன் கணக்கில்...

வரவும் செலவும்
வருவாய்க் கணக்கில்
நட்பும் பிரிவும்
உறவுக் கணக்கில்
நல்லதும் கெட்டதும்
அறிவுக் கணக்கில்
தன்நலமும் பிறர்நலமும்
உணர்வுக் கணக்கில்
காதலும் தோல்வியும்
இளமைக் கணக்கில்
மகிழ்வும் துயரும்
வாழ்க்கைக் கணக்கில்
ஆயினும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கணக்கில்...
எத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!

Sunday 2 November 2014

உலகமே அறிந்து கொள்...

அலைவரிசை(சனல்)-4 வெளியிட்டது
பொய் என்று
இலங்கை அரசு சொன்னாலும்
வன்னிப் போருக்குள் சிக்கித் தப்பிய
நான் சொல்வதில் பொய் இல்லையென
உலகமே அறிந்து கொள்!
புலிகளையும் பிரபாகரனையும்
கடலுக்குள் மூழ்கடிப்பதாகக் கூறி
பாதுகாப்புப் பகுதியென
அறிவிக்கப்பட்ட இடமென ஓடோடி ஒதுங்கிய
முள்ளிவாய்க்காலில் சாவடைந்த
மூன்றரை இலட்சம் ஈழத் தமிழரை
நினைவூட்டச் சொல்கிறேன்...
உலகமே அறிந்து கொள்!
முதலாம், இரண்டாம்
உலகப் போரில் கூட
இப்படி நிகழ்ந்திருக்காது...
"பதுங்குழிக்குள் வாங்கப்பா" என
"செத்தால் இருவரும் சாவோமப்பா" என
என் துணைவி அழைக்க
"ஐயோ என்ர கடவுளே" என
சாவின் பிடியிலிருந்து தப்பிக்க
ஓடி ஒளியப் போய்
சாவடைந்த ஈழத் தமிழரை
உலகமே நினைத்துப் பார்த்தாயா?
வானிலிருந்து, கடலிருந்து, தரையிலிருந்து
குண்டு மழை பொழிந்த
இலங்கைப் படைகளை
ஐ.நா. சபை
போர்க் குற்றவாளிகளாக்க முடியாமைக்கு
அலைவரிசை(சனல்)-4 ஒளிஒலிப் படங்கள்
சான்றாகக் காட்ட வலுவற்றதா?
பொக்கணை தொடங்கி
இரட்டை வாய்க்கால், முள்ளி வாய்க்கால் உட்பட
வட்டுவாகல் வரை
இலங்கை அரசால்
தடை செய்யப்பட்டது ஏன்?
குண்டு மழைக்குள் தப்பிய
நான் கண்டேன்...
கொத்து(கிளஸ்ரர்)க் குண்டு வீழ்ந்ததும்
(கிளஸ்ரர் குண்டு-ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது)
வீழ்ந்த இடத்திலிருந்து
100 மீற்றர் சுற்றுவட்டத்து மக்களை
சாவடையச் செய்தும்
உடல்களைத் துண்டாடச் செய்தும்
தன் வேலையைக் காட்டியதே!
மக்களைச் சிதறி ஓடாமல் செய்ய
மூச்சுத் திணற வைக்கும்
புகைக்குண்டு வீ்ழ்ந்த பின்னே
எரி(பொஸ்பரஸ்) குண்டு வந்து வீழ
குண்டுகள் வீழ்ந்த இடத்து மக்கள்
சாவடையாமல்
தப்பிக்க இயலாமல் இருந்ததே!
இறந்தவர்களையா
நம்மாளுகள் விட்டுவிட்டு வந்தனர்...
தம்மைப் பெற்ற பெற்றோர்களை
தாம் பெத்த பிள்ளைகளை
(கைக்குழந்தைகள் உட்படத்தான்)
தம் துணைகளை, உறவுகளை
தமது சொத்துகளை எல்லாம்
இழந்து வட்டுவாகலில் ஏறியும்
(மெனிக் பாம்) அரச சிறைக் கூட்டில்
(கூரைத் தகடுகளால் அடைத்த அறை)
நினைத்து நினைத்து அழுதவர்கள்
இன்றும் அழுவதை
உலகமே சற்று எண்ணிப் பார்!
மே-18-2009 ஆம் நாள்
இத்தனையின் உச்சக்கட்டம்
அதனால், உலகத் தமிழினம்
இந்நாளில் - இவற்றை
ஒன்றிணைத்து மீட்டுப் பார்க்கையில்
உலகமே
உன் பதிலைச் சொல்வாயா...
இல்லையேல்
கண் மூடித் தூங்குவாயா...
எப்படியோ
நம்மாளுகள் நாள்தோறும்
இவற்றை நினைக்காமல் வாழ
முடியவில்லையே
உலகமே அறிந்து கொள்...!

Friday 31 October 2014

என் பார்வையில் பிழையுண்டோ?


கதிரவன் கதிர்வீச்சில்
கண்ணைப் பறிக்கும் பனித்துளிகளில்
வானவில்லையே பார்க்கிறேன்!

வரண்டு போன நிலத்தில்
வானம் கொட்டிய மழைத்துளிகளில்
பயிர்களின் நிமிர்வைப் பார்க்கிறேன்!

முந்தைய நாள் மழையில்
வேலிப் பக்கமாய் வெண்குடைகளாய்
காளான் பூத்திருப்பதைப் பார்க்கிறேன்!

கடற்கரைப் பகுதியில்
பல நிறக் குடைகள் தலையாட்டுமங்கே
இருவர் ஒருவராகி உருள்வதைப் பார்க்கிறேன்!

நிமிர்ந்து நடைபோடும் ஆண்களில்
ஆடைகளில் அழகில்லைப் பாரும்
ஆனாலும், நழுவும் ஆடைகளைப் பார்க்கிறேன்!

இடைநெழிய நடைபோடும் பெண்களில்
காணும் ஆடைக் குறைப்பில்
கெட்டதுகள் வால்பிடிக்கப் பார்க்கிறேன்!

தெருவோர மதுக்கடைப் பக்கத்திலே
கூத்தாடும் ஆண்களுக்கு எதிர்ப்பக்கத்திலே
தள்ளாடும் பெண்களையும் பார்க்கிறேன்!

கட்டையனின் தேனீர்க்கடை முன்னே
தொங்கும் அட்டையிலே புகைத்தலுக்குத் தடையாம்
கடையின்பின் பெண்களும் புகைப்பதைப் பார்க்கிறேன்!

வழிநடுவே விபத்து நடந்த இடத்திலே
விழிபிதுங்க ஓருயிர் துடித்துக் கொண்டிருக்க
ஒருவரும் உதவாமல் பயணிப்பதைப் பார்க்கிறேன்!

நாளும் நாற்சந்தியில் கூடும்
நாலா பக்கத்தினரில் கருத்தாடல் இருந்தாலும்
ஒற்றுமையின்மை உடனிருக்கப் பார்க்கிறேன்!

எத்தனை எத்தனை இடங்களிலே
எத்தனை எத்தனை உண்மைகளை
பார்த்தாலுமென் பார்வையில் பிழையுண்டோ?

Thursday 30 October 2014

முடிவு

அன்பாகப் பழகுவது
என்னோட இயல்பு
அதற்காக
என்னைப் பற்றி
அடி, நுனி அறியாமல்
முடிவு எடுக்கலாமோ?
சொல்லிவிடு என்கிறாய்
முடிவைச் சொல்லிவிட
'முடிவு' என்பது
இலகுவாக எடுக்கக்கூடிய ஒன்றல்ல...
நீ
காதலி என்கிறாய்...
என் துணைவியோ
உன்னைக் காதலிக்க மறுக்கிறாள்...
இந்நிலையில்
எவர் முடிவை எவர் மாற்றுவது?

Wednesday 29 October 2014

குளவிக் கூடும் மக்கள் குழுவும்

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தால்
உள்ள குளவிகள் எல்லாம்
மெல்லச் சூழல் எங்கும்
பறந்து பறந்து கொட்டுமே!

மக்கள் குழுவிற்குள் சொல்லெறிந்தால்
கூடிய மக்கள் எல்லோரும்
தேடித் தேடியே எங்கும்
செய்தீயாப் பரப்புவதைக் காண்பீரே!

குளவிக் கூட்டுக்குக் கல்லெறிய முன்னும்
மக்கள் குழுவிற்குள் சொல்லெறிய முன்னும்
நம்மவர் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்
எப்பவும் பின்விளைவைக் கொஞ்சம் படிக்கலாமே!

Tuesday 28 October 2014

கல்வி கற்போம் கற்றதைப் பகிர்வோம்!


“The Root of the Education is Sour
The fruit of the Education is Sweet”
இப்படி என்றால்
எப்படி என்று தெரியுமா?
கல்வியின் தொடக்கம்
கொஞ்சம் புளிக்கும் தான்
கொஞ்சிக் கொஞ்சிக் கற்றால் தான்
கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள
கல்வியும் இனிக்கும் என்பதேயாம்!
இதெல்லாம்
நவராத்திரி நாள்களிலே தான்
கல்வியா? செல்வமா? வீரமா?
எது பெரிதென்று
நாம் போட்டி போடும் போதே
நாம் அறிவோமே!
அப்ப தானே
அள்ள அள்ள வற்றாத செல்வம்
கல்விச் செல்வம் என்றறிவோமே!
இதை வைச்சுத் தானே
எங்கட முன்னோர்கள்
"கற்றது கைப்பிடி மண்ணளவு
கல்லாதது உலகளவு" என்று
எடுத்துக்காட்டுக்குச் சொல்வார்களே!
எப்படி எப்படி என்கிறீர்களா?
நாம் எப்படித் தான்
எவ்வளவோ கற்று முடித்தாலும்
அவை
கைப்பிடிக்குள் அள்ளிய
மண்ணளவு என்று ஒப்பிட்டாலும்
இன்னும்
கற்க வேண்டியிருப்பது
எவ்வளவு என்று சொன்னால்
உருளும் உலகம் அளவு என்கிறாங்க!
என்னங்க
உலகளவு கற்க முடியாதுங்க
என்றால் சரியாகுமா?
முடியும் என்கிறேன் - முதலில்
கைப்பிடியளவு படிப்போம்…..
கற்றதைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி
"யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெறட்டும்" என
கற்றதைப் பிறரோடு பகிர்வோம்,,,
அப்ப தான்
எஞ்சியதைப் படிக்க வாய்ப்பு வருமே!
எடுத்ததிற்கு எல்லாம்
எடுத்துக்காட்டாக
எடுத்துக்காட்டுவதும் திருக்குறளே - அந்த
திருக்குறளையே எழுதிய திருவள்ளுவர் தான்
130 அதிகாரங்களில்
1330 திருக்குறள் எழுதி - அவற்றில்
உலகளவு கல்வியைத் தந்தாரே!
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என
ஔவையார் சொன்னபடி - அதாவது
இளமையில் கற்றவை
என்றும் மறக்க இயலாதது போல
உலகளவு கல்வியைக் கூறும்
திருக்குறளையும் கற்போம்!
"கற்க கசடறக் கற்க கற்றபின்
நிற்க அதற்குத் தக" என்று
வள்ளுவரும் சொன்னாருங்க…
கற்பவை நிறைவாகக் கற்று
அதன் வழி செயற்படுவோம் என்பதே
வள்ளுவரின் வேண்டுதலும் ஆகுமே!
வாருங்கள் உறவுகளே…
ஒன்றாய்ச் சேருங்களேன்
நன்றாய்க் கல்வி கற்போமே
கற்றவை யாவும் பிறரறியப் பகிர்வோமே!

Sunday 26 October 2014

எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?

நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.


  1.  எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
  2.  மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
  3.  மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
  4.  நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

  1.  அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
  2.  குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
  3.  பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
  4.  முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
  5.  தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

Friday 24 October 2014

தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!



வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து  
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே 
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற 
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!

எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த 
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!

ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!

கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள் 
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!

கடவுள் அழுகின்றான்...!


அழகான உலகில்
நானும் நீங்களும்
கடவளின் வடிவமைப்பே!
நமக்கிடையே நிகழ்வதெல்லாம்
நாமே
வடிவமைத்தது என்பேன்!
உலகம் அழிவதற்கும்
நாம்
நம்மை அழிப்பதற்கும்
கடவுளின் திருவிளையாடல் அல்ல...
நமது செயற்பாடுகளே!
அழிகின்ற உலகையும்
அடிபட்டுச் சாகும் உயிர்களையும்
வானிலிருந்து பார்த்தவாறே
உலகையும் உயிர்களையும் படைத்த
கடவுள் அழுகின்றான்...!
படைப்பது
என் தொழில் என்றால்
அழிப்பதும் அழிவதும்
நம்மவர் தொழில் என்றா
கடவுள் அழுகின்றான்...!
நான் பிறந்தேன்
நான் வாழ்ந்தேன்
என்றில்லாமல்
நம்மைப் படைத்த
கடவுளைக் கூட
எப்பன் எண்ணிப் பார்த்தாலென்ன!

Thursday 23 October 2014

தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?


தொலைக்காட்சி
ஒரு தொல்லைக்காட்சி அல்ல...
தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்போரும்
பிழை விட்டதில்லை...
பனை ஏறுபவன்
பனையில ஏறாவிட்டால்
தெருவில குடிகாரரைப் பார்க்க முடியாதே...
அது போலத் தான்
வணிக நோக்கிலான தயாரிப்பாளர்கள்
பார்ப்போர் விருப்பறியாத அறிவிப்பாளர்கள்
விளம்பரங்களால்
நிகழ்ச்சிகளுக்குப் பின்னூட்டம் கொடுப்போர்கள்
தொலைக்காட்சியில் இருக்கின்ற வரை
தொல்லைக்காட்சி தோன்ற இடமிருக்கிறதே!
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா?
ஆமாம்!
கெட்டதைக் கலக்கும் தயாரிப்பாளர்கள்
பிறமொழி கலக்கும் அறிவிப்பாளர்கள்
நிகழ்ச்சியைக் குழப்பும் விளம்பரதாரர்கள்
இவற்றையும் கடந்து தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சியைப் பார்த்தால்
தொலைக்காட்சியில் தொல்லைக்காட்சியா? என்று
எண்ணத்தோன்றுகிறதே!

Wednesday 22 October 2014

எந்தப் பெயர் சொந்தப் பெயர்?

நல்ல பெயரெடுக்க நாளும் முயற்சிக்கிறேன்
கெட்ட பெயரல்லவா முட்டி மோதுகிறதே
"பெறுமதியானது நற்பெயரே!"

நல்லதைத் தமக்கும் கெட்டதைப் பிறர்க்கும்
தனக்குப் பின் தானம் என்பதற்காகவே வழங்குவர்
"மலிவானது கெட்ட பெயரே!"

பெற்றவர் வைத்தது அடையாளப் பெயரே
நம்மவர் செயலால் கிடைப்பது தகுதிப் பெயரே
"ஆளை மதிப்பிட உதவுவதும் பெயரே!"

கெட்டது செய்யின் விளைவும் கெட்டதே
நல்லது செய்யின் விளைவும் நல்லதே
"சூழல் சொல்வதும் உன் பெயரே!"

Monday 20 October 2014

முன்நாளும் பின்நாளும்


இன்றெல்லாம்
ஆளுக்காள்
தூண்டிவிட்டும் கூட
ஆயிரம் பொய் சொல்லி
ஒரு திருமணம் மட்டுமல்ல
பல காதல் கூட
இடம்பெறுகிறதாமே!
எல்லோரும் சேர்ந்து
காதலிக்கவும் வைப்பார்கள்
மணமுடிக்கவும் வைப்பார்கள்
கடைசியில்
நானும் மனைவியும்
காதலித்து மணமுடித்த பின்
நாம் படும் துன்பங்களை எவரறிவார்?
காதலிக்க வைப்பதும்
மணமுடிக்க வைப்பதும்
சுகமே - ஆனால்
அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
காதலித்தவரும்
மணமுடித்தவரும்
பின்நாளில் படப்போகும் துன்பங்களை!
மாற்றாரை நம்பி
காதலிக்கவும் மணமுடிக்கவும்
இறங்குவோரே - உங்கள்
பின்நாளை நினைவூட்டி
நீங்களாகவே
நம்பிக்கையானவர்களோடு
நம்பிக்கையுடன்
காதலிக்கலாம் மணமுடிக்கலாம்...
நம்பிக்கை தான்
காதலில் வெற்றியையும்
மகிழ்வான வாழ்வையும்
எமக்குத் தருகிறது என்பதை
நாம் அறிவோமா!
மணமுடிக்க முன் காதலித்தால்
சில வேளை தோல்வி தான்
மணமுடித்த பின் காதலித்தால்
எல்லா வேளையும்
மகிழ்ச்சி அதிகம் தான்
ஆனால் - அது
சாகும் வரை தொடர்ந்தால்
முதுமை கூட இளமை ஆகலாம்!

Sunday 19 October 2014

சொல்லுக் கேட்பதாயில்லை...

படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சாலும்
பிள்ளைகள் சொல்லுக் கேட்பதாயில்லை...
பட்டுக் கெட்டு நொந்த பின்னே
அம்மா, அப்பா என்றழுகையில் தெரிகிறதே...
"பிறர் பேச்சுக்கும் பெறுமதி உண்டென்றே!"

நம்மாளுகளும் நம்மையாளும் கடவுளும்


வாழ்வை வழங்கிய கடவுள் பார்க்கிறான்
நம்மாளுகள் மகிழ்வாக வாழ்கிறாரா என்றுதான்...
கிடைத்த வாழ்வில் துயரைக் கண்டதும்
நம்மாளுகள் வாழ்வதைவிட சாகலாம் என்கிறார்களே!

வாழ்வை வழங்கிய கடவுளுக்குத் தெரியும்
துயரெனும் விலையைக் கொடுத்தே வாழணுமென்று...
துயருக்குப் பின்னும் மகிழ்வு உண்டென்று
நம்மாளுகளுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே!

வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ!

Saturday 18 October 2014

கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகள்

நம்ம பூனை நல்ல பூனை
சும்மா சொல்லக் கூடாது
உறியில கிடந்த பாலை
கண்ணை மூடிக் கொண்டு
களவாய்க் குடிக்குமே!
உறியால விழுந்த மூடி
ஒலி எழுப்பக் கேட்டு
எட்டிப் பார்த்த போது தான்
கண்டு பிடித்தேன் இந்த உண்மையை!
நல்ல நல்ல பிள்ளைகளைப் பார்
கண் மூடிப் பால் குடிக்கும் பூனைகளாய்
பெத்தவங்களுக்குப் புழுகி விடுறாங்க
ஆசிரியர்களுக்குக் கயிறு விடுறாங்க
இயமனுக்கே ஊறுகாய் போடுவாங்க
கடவுளுக்கே இருட்டடி போடுவாங்க
செய்வதெல்லாம் செய்துபோட்டு
மக்களாயம்(சமூகம்) காணவில்லையென
சுத்தமான ஆளுகளைப் போல
நடுவழியே நடை போடுறாங்களே!
பள்ளிக்கு ஒளிச்சவங்களை
தேர்வுப் பெறுபேற்றில் பார்க்கலாம்
உழைப்புக்கு ஒளிச்சவங்களை
தின்னக் குடிக்க வழியில்லாட்டிப் பார்க்கலாம்
கணவனுக்கோ மனைவிக்கோ ஒளிச்சவங்களை
மூன்றாமாள் முரண்டுபிடிக்கையில் பார்க்கலாம்
கடன்கொடுத்தோருக்கு ஒளிச்சவங்களை
சூழலுக்குள்ளே சுழலுகையில் பார்க்கலாம்
மாற்றான் கண்ணுக்குத் தெரியாதென
இத்தனை பூனைகளும்
இப்படித்தான் பால் குடிக்கின்றனவே!
காதல் என்னும் போர்வையில் கூடினாலும்
கலவி என்பதைச் சோதனை செய்தாலும்
மருத்துவருக்கு முன்னே மாட்டுப்படுவினமே...
புகைத்தலைச் செய்தாலும்
மக்கள் முன்றலில்
மணப்பதால் மாட்டுப்படுவினமே...
ஒளிச்சுத்தான் கள்ளுக் குடிச்சாலும்
ஊருக்கப்பால் கறுப்புவெள்ளை குடிச்சாலும்
ஆடையணிகள் அவிழ்ந்த நிலையில்
தெருவழியே விழுந்து கிடக்கையிலே
மக்கள் முன்னே மாட்டுப்படுவினமே...
எட்டி எட்டி எட்டடி பாய்ந்தாலும்
இப்படித்தான்
இத்தனை பூனைகளும் பால் குடிப்பதை
எப்படியோ
மக்களாய(சமூக)மும் கண்டுபிடிக்கிறதே!
நல்ல நல்ல பிள்ளைகளே
உங்க வீடும் நாடும்
உங்களைத் தான் நம்பியிருக்கே...
நீங்க மட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் தெரியாமல்
நடிப்பதை விட்டுப் போட்டு
படிச்சுப் படிச்சு ஒழுக்கம் பேணுங்களேன்!

Friday 17 October 2014

படிப்பது பிள்ளைகளா பெற்றோரா?


மருத்துவராகவோ
சட்டவாளராகவோ
பொறியியலாளராகவோ வரும் வண்ணம்
பிள்ளைகளுக்குத் தொல்லை கொடுப்பது
பெற்றோரின் கோழைச் செயலே!
எவரது கல்வியிலும்
எவரும் தலையிடுவது அழகல்ல...
எந்தக் கல்வி இலகுவானதோ
அந்தக் கல்வியை
எவரும் தொடரலாமே!
ஆனாலும் பாருங்கோ
கல்வியை விரும்பியவருக்கே
கல்வியானது
இலகுவாயிருக்கும் கண்டியளோ!
பிள்ளைகள் விரும்பும் கல்விக்கு
பெற்றவர்கள் இசைந்தால் போதுமே
நாளைய வழித்தோன்றல்கள்
நல்ல அறிஞர்களாகவே மின்னுவரே!

காட்டுகிறாள் என்றால் பாருங்களேன!



இவள் என்னடா
ஆங்கிலத்தில தொடங்கி
தமிழைக் கொன்று
ஆட்டம் போட்டுக் காட்டி
அடங்கி ஒதுங்கிப் போறாளே...
இல்லை இல்லை
இல்லாத இடுப்பைக் காட்டி
இளசுகளை இழுக்கப் பார்க்கிறாளோ...
தன்னைத் தாழ்த்தினால் பரவாயில்லை
தமிழைக் கொல்ல இடமளியேன்...
என் அருமைத் தமிழ் விரும்பிகளே
இவளது நடிப்புப் பரவாயில்லை
ஆனால்
படிப்புச் சரியில்லை...
யாழ்பாணக் கொத்துரொட்டி மட்டும்
இவள் காட்டவில்லை - தான்
யாழ்பாணப் பண்பாட்டையும்
கழட்டிப் போட்டாள் என்றும்
காட்டுகிறாள் என்றால் பாருங்களேன்!

Thursday 16 October 2014

தெரு ஓரத்துச் செய்தி

வெட்டி வெட்டிப் போடுறாங்க பார்
அட்டி அட்டியாக ஏறுது பார்
நம்மவர் வீட்டு இலைகுழை!

பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!

சட்டி சட்டியாக ஊத்துறாங்க பார்
கட்டி கட்டியாக ஊருது பார்
நம்மவர் வீட்டுக் கழிவு!

(கழிவு: மீன், இறைச்சி கழுவிய நீர்)




மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_16.html

Tuesday 14 October 2014

பணம் பற்றிய பேச்சு!


எவர் வாயாலும்
பணம் பற்றிய பேச்சுத் தான்
கேட்கத் தான் முடிகிறதே!
காதலிப்பாயா என
தோழியிடம் கேட்டாலென்ன
இனிய இரவாகட்டுமென
மனைவியோடு படுக்கையை விரித்தாலென்ன
முதலில பணத்தை வையப்பா என
எட்ட விலகிறாங்களே!
பணம் பத்தும் செய்யுமாம்
குணம் செத்தாலும் நிலைக்குமாம்
ஆனால்,
நம்ம ஊரில நடப்பது என்ன?
பணத்தைப் பொத்திப் பொத்தி
வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் இல்லையே...
பணத்தைக் கிள்ளிக் கிள்ளி
ஊருக்கெல்லாம்
கொடுத்து வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் நிறைந்து இருக்குமே...
எப்படி இருப்பினும்
எவரும்
தனக்குப் பின்னே ஈகம் (தானம்) என்பதை
மறக்கவில்லைத் தானே!
கறுப்புப் பணம்
சிறை செல்லத் துணைக்கு வரும்
நீலப் பணம்
உயிர்கொல்லி (எயிட்ஸ்) தரத் துணைக்கு வரும்
பொய்ப் (போலிப்) பணம்
உறவுகளற்ற நிலைக்குத் துணைக்கு வரும்
உண்மைப் (மெய்ப்) பணம்
உறவுகள் நிறைந்த நிலைக்குத் துணைக்கு வரும்
என்றெல்லோ நம்ம ஊரில
பணம் பற்றிப் பேசுறாங்களே!


Friday 10 October 2014

எனது உள்ளம் நிறைந்த நன்றி!


எனது 46 ஆவது பிறந்த நாள் 07/10/2014 அன்று தான். அன்றைய நாள் வாழ்த்துத் தெரிவித்த எல்லோருக்கும் எனது நன்றி.


ஓய்வு!

என் கண் கணினியை மேயாமல்
கணினி என் கண்ணை மேயாமல்
கண்காணிக்குமாறு மருத்துவர் தான்
எனக்குரைக்க
நானும் ஓர் ஏழலுக்கு ஓய்வு!

உடல் நலக் குறைவு காரணமாக வலைப் பூக்களைப் படித்துக் கருத்திடவோ எனது பதிவுகளையோ இட முடியாமைக்கு மன்னிக்கவும். அடுத்த ஏழலில் (வாரத்தில்) எல்லாம் சரியாகிவிடும்.


Monday 6 October 2014

எதை எழுதலாமென்று தான்...


எனது மடிக்கணினிக்கு
அடிக்கடி மூச்சுப் போகிறதே...
அதுதான் பாருங்கோ - அது
மின்னைக் (Current) குடிக்காமையால்
இயங்க மாட்டேன் என்கிறதே!
கணினி மருத்துவரிடம் (PC Technician) காட்டினால்
இப்ப நெருக்கடி என்றார்
அப்ப தான்
எதை எழுதலாமென்று தான்
எண்ணிப் பார்த்தேன்!
அடிக்கடி பழுதாகும்
மடிக்கணினிக்குப் பதிலாக
மாற்றுக் கணினி தேவை என்று
விளம்பரம் எழுதலாமோ
மடிக்கணினிக்கு மூச்சுப் போனதால்
வலைப்பூக்களில் பதிவிட
முடியவில்லையென எழுதலாமோ
இப்படியே
எத்தனை சாட்டுச் சொல்லலாமென
எண்ணிய போது தான்
"சாட்டு இல்லாமல் சாவில்லை" என்ற
முதுமொழியை
எழுதலாமென எண்ணினேன் - அப்படி
எழுதினாலும் பாருங்கோ - அதற்கான
விளக்கமென்ன என்று கேட்டால்
என்ன பதிலைச் சொல்லலாம் என்று
பதிலையே தேடிக் கொண்டிருந்தேன்!
ஆங்கொரு முதன்மைச் சாலையில்
தம்பி ஒருவனோ  தங்கை ஒருவளோ
உந்துருளி (Motor Bike) ஒன்றை வேண்டினார்
ஓடத் தயாரானார்... ஓடினார்...
மூறுக்கோ முறுக்கென
வலக் கைப்பிடியை முறுக்கினார்,,,
இடக் கைப்பக்கமாக வந்த
கன (பார) ஊர்தி மோதியதால்
மோதிய இடத்திலேயே
தம்பியோ  தங்கையோ மூச்சைவிட்டாரென
செய்தி ஒன்றைப் படித்தேன்!
உந்துருளி (Motor Bike) ஓடியவரை
கன (பார) ஊர்தி மோதி
உயிரைக் குடித்தது என்றோ
உந்துருளி (Motor Bike) ஓடுவதாக
மூச்சாகப் பறந்தவர்
மூச்சைவிட்டார் என்றோ
எழுத எண்ணிய வேளை தான்
சாவிற்குச் சாட்டு இவையென
பதில் கூறலாமென எழுதினேன்!


Friday 3 October 2014

காதலர் நாள் நினைவில்...


சாவு ஒறுப்புக் குற்றாவாளியாம்
வலன்ரைனை
சிறைக்குச் சென்று வந்து
சாப்பாடு கொடுத்தவளே
காதலித்தாலும்
வலன்ரைன் சாவடைந்த நாளே
காதலர் நாள் மாசி 14ஆம்!
மாசி 14ஆம் நாள்
உயரிய காதலையே நினைவூட்டும்
கீழ்த்தரக் காதலர்களை நினைவூட்டுமா?
'காதல்' என்பது
மூளையில் தூண்டப்பட்ட தூண்டி(ஓமோன்)யால்
உருவானதல்ல
உள்ளத்தில் விருப்புற்றதன் விளைவே!
அழகிற்காக, பாலியல் உணர்விற்காக, பணத்திற்காக போன்ற
எதற்காகவேனும் காதலித்தவர்
காலப்போக்கில் பிரிந்தாலும்
நல் எதிர்காலத்தை, நல வாழ்வை சிந்தித்தவர்
சாகும் வரை காதலிப்பதைப் பாரும்!
சாகும் வரை காதலித்து
வாழுவோம் என்ற முடிவோடு
காதலிப்பவர்கள் நினைவூட்ட
நல்ல நாள் மாசி 14 என்பேன்!
சாகும் வரை
காதலிக்கும் இணையர்களைக் காண
முடியாத போதும்
காதலர் எண்ணிக்கை அதிகம் தான்
ஆனால்,
எல்லாமே
பள்ளிக் காதல் படலை வரையுமா என
எண்ணத் தோன்றுகிறதே!

Thursday 2 October 2014

பட்டுத் தெளிந்த பின்...

ஆளுக்காள் அறிவுரை சொன்னால்
இலவசமாக வழங்கக்கூடியது
இதுதானென்று
எவரும் எப்பனும் கேட்பதாயில்லை!
அது, இது, உது என
எத்தனையோ தவறுகள் செய்தமைக்கு
அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,
கண்ட இடத்துக் காவற்றுறையும் தான்
அடித்து நொருக்கினாலென்ன
நெருப்புக் கொள்ளியால சுட்டென்ன
நாளும் நம்மாளுகள்
தவறு செய்வதை நிறுத்தியதாயில்லை!
சின்னப் பிள்ளையாயிருக்கையிலே
நானும்
பொல்லாத அட்டாதுட்டிக் குழப்படிகாரன்
ஆனாலும்
என் அப்பா ஒரு நாளும் அடித்ததில்லை!
என் அம்மாவுக்கு வெறுப்பு வர
"பொடியனை அடிச்சுத் திருத்தாட்டி
பின்னுக்குக் கெட்டுப்போவான்" என
அப்பாவுக்குச் சொல்லி அடிக்கச் சொன்னாலும்
அம்மா கூட எனக்கு அடித்ததில்லை!
"பொடியனை அடிச்சுத் திருத்தேன்டா" என
ஊரார் சொன்னாலும் கூட
எல்லோருக்கும்
என் அப்பா சொல்லும் ஒரே பதில்;
சொல்லியும் திருந்தாதோர்
சுட்டும் திருந்தாதோர்
பட்டுத் தெளிந்த பின் தானே திருந்துவினம்!
தம்பி, தங்கைகளே
எல்லோருக்கும்
என் அப்பா சொன்ன அறிவுரை
எப்பன் உங்கட தலைக்கு ஏறிடுச்சா?
தலையில பதிச்சு வைக்காட்டி
பட்டுத் தெளிந்த பின்
கணக்கிலெடுக்க மறக்கமாட்டியளே!

Tuesday 30 September 2014

அழைப்பு விடுக்கின்றேன்!


எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

Monday 29 September 2014

பொழுது போக்கிற்காக...


ஒரே ஒரு கேள்வி தான். ஆறாள் கூறும் பதில்கள் வேறுவேறு தான். இவங்கட பேச்சே நல்ல நாடகமாச்சு...

முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

முதலாம் ஆள் : உங்கட நிலைப்பாடு என்னவாச்சு?

ஐந்தாம் ஆள் : நானும் ஒருத்தியைக் கேட்டேன். "Love" பண்ண (சந்திக்க) வரும் ஒவ்வொரு முறைக்கும் ஆயிரம் உரூபா கேட்கிறாளே!

ஆறாம் ஆள் : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெட்டையளைச் சுத்துற பொடியளாலே தான்,  பெட்டையளும் எடுப்புக் (லெவல்) காட்டுகினம்.

முதலாம் ஆள் : அட பொடியங்களே! பொழுது போக்கிற்காகப் பெட்டையளைச் சுத்துற வேலையை நிற்பாட்டிப் போட்டு; ஒழுங்காய் படிச்சா, நல்ல வருவாய் எடுத்தா எந்தப் பெட்டையும் உங்கட காலில விழுவாள்களே!

Sunday 28 September 2014

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!


இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காளான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

Friday 26 September 2014

ஆண்களே பதில் சொல்லுங்களேன்!


அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

Sunday 21 September 2014

நாலுகாசு வைப்பிலிட்டு


கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே! அப்படியுமா...
இன்னும் இன்னும்
எத்தனையோ சொல்லி எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!

Saturday 20 September 2014

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

Tuesday 16 September 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


Sunday 14 September 2014

கிழிஞ்சு போச்சு

திரைப் படங்களிலே
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலேயே
திரைப்படக் கொட்டகைக்கு வெளியே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

பொழுதுபோக்கிற்காக...


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!

Friday 12 September 2014

வெளிநாட்டில் உள்ளவருக்கு...

அவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை
கண்டுபிடித்தவர்களை விட
உலகில் எந்தெந்த நாடுகள்
ஏதிலி(அகதி)யாக இருக்க
இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
யாரென்றால்
இனமோதல்களால் புலம் பெயர்ந்த
இலங்கைத் தமிழர்களே!
புலம் பெயர்ந்த படைப்பாளிகள்
இருக்கும் வரை தான்
உலகின் முலை முடுக்கெங்கிலும் இருந்தும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
வெளிவர வாய்ப்புண்டாம்!
போன உறவுகளும் போன நாட்டில்
போன நாட்டு வாழ்வோராக
மாறிப் போன பின்னர்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை
வெளிக்கொணர்வார்களென
எப்படி நம்பலாம்?
தமிழைப் பேண வேண்டுமாயின்
தமிழ் இலக்கிய வளர்ச்சியை
பேண வேண்டுமென்மதை உணர்ந்த
புலம் பெயர் படைப்பாளிகளே
உலகெங்கும்
தமிழ் இலக்கியம் பேணும்
படைப்பாளிகள் அணியை
இனிவரும் தலைமுறைக்குள்ளே
உருவாக்கிவிட முடியாதா?
ஈழவர் அடையாளம்
ஈழத் தமிழ் இலக்கியத்தில் தான்
வெளிப்பட வேண்டுமாயின்
நாளைய
புலம் பெயர் தலைமுறைகளே
இலக்கியம் படைப்போம்
இனித் தமிழ் அழிவதைக் காப்போம்
இப்படிக்கு
தமிழைக் காதலிக்கும் ஈழவர்!

இப்பதிவு ஈழத்தில் இருந்து ஏதிலி(அகதி)யாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடம் ஈழத் தமிழர் பட்ட துயரங்களை எழுதுமாறு விண்ணப்பித்தது போல உள்ளத்திலே நினைத்து எழுதினேன்.

முதலாம் பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_12.html

உள்நாட்டில் உள்ளவருக்கு...

இலங்கையை ஆண்ட பிரித்தானியா
பிரித்தாண்டு பழக்கியதால் தான்
இன மோதல்கள் மட்டுமல்ல
தமிழருக்குள்ளே ஒற்றுமையின்மையும்
தோன்றியிருக்கலாமென
நம்பத் தோன்றுகிறதே!
என்னவாக இருப்பினும்
உள்நாட்டில் உள்ளவருக்குத் தான்
எத்தனை எத்தனை துன்ப துயரங்கள்
எல்லாமே
நாளைய இருப்பைத் தேட
தூண்டியது மட்டுமல்ல
புதிய படைப்பாளிகளை
உருவாக்கவும் தவறவுமில்லை!
இடப்பெயர்வுகள்
படைப்பாளிகளுக்கு உணவு(தீனி) போட்டும்
படைப்புகள் வெளிவராமைக்கு
பொருண்மிய இழப்புகளா...
வெளியீட்டாளர்கள் இன்மையா...
வாசகரும் வாங்குவதில்லையா...
படைப்பாளிகள் முன்வராமையா...
படைப்புகள் ஆக்குவதை
படைப்பாளிகள் நிறுத்தினரா...
இப்படி எத்தனை சாட்டுகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
நலிவுறச் செய்கிறது என்பதை
எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!
இளைய நெஞ்சங்களே...
போரும் அமைதியும்
மாறி மாறித் தொடர்ந்தாலும்
இலக்கியம் அழிந்தால்
இலக்கணம் இருக்காது எனின்
தாய் மொழியாம் தமிழும் சாகாதோ...
அப்படியாயின்
தமிழ் அழிவதைப் பார்த்துக்கொண்டிருப்பது
படைப்பாளிகளின் வேலையா?
கையெழுத்துப் படிகளாகவோ
இலவச இணையத்தள வசதியோடு
இணையத் தளப் பதிவுகளாகவோ
வேறு
இயன்ற வழியில் முயன்று பார்த்தோ
தமிழ் மொழி அழியாது பேண
ஈழத்து உண்மைகளை உலகமறிய
தமிழரின் அடையாளத்த வெளிப்படுத்த
போர் நெருக்கடிகளிலும்
இலக்கியம் படைக்க அழைப்பது
தமிழைக் காதலிக்கும் உங்களில் ஒருவர்!

2004 கடற்கோளின் பின்னரான ஈழப் போர்ச் சூழலில் எழுதியது.

அடுத்த பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_71.html

Tuesday 9 September 2014

பொங்கின புக்கை

தைப்பொங்கலை ஒட்டிப் பல பொங்கல்கள் வருமே! அந்த வேளை இப்படி இருவர் நாடகமாடினர்.

முதலாமவர் : ஒருவரையும் நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : எப்படி அப்பா இப்படிப் போட்டுடைப்பா...

இரண்டாமவர் : பகலவனை நம்பித் தானே!

முதலாமவர் : அதெப்படியப்பா...?

இரண்டாமவர் : தைப்பொங்கலை வைச்சுத்தானப்பா...
...
முதலாமவர் : எடுத்துக்காட்டுக்கு ஏதாச்சும் சொல்லப்பா...

இரண்டாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... கொஞ்சம் மூளைக்கு வேலை கொடேன்...

Friday 5 September 2014

பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்


அப்பு, ஆச்சி சொன்னாங்க...
பேரன், பேத்தியைப் போல
நல்ல பெயர் எடுக்க வேணுமென்றே!
விடிய, விடிய
விழுந்து, விழுந்து படித்து
பட்டங்கள் பல பெற்றாங்க...
பகையைக் கிட்ட நெருங்காமல்
எட்ட நின்று பழகி
ஒழுக்கம் பேணினாங்க...
எல்லாவற்றையும்
சொல்லி என்ன பயன்?
நீங்களா உணர்ந்தெல்லோ
வாழப் பழகணும் என்றுரைப்பது
அப்பனும் ஆத்தாளும் பாருங்கோ!
விடிய, விடிய இராமாயணம்
விடிஞ்சாப் பிறகு கேளும்
இராமன் சீதைக்கு என்ன முறையாம்
காற்றோடு நேற்று முடிந்த கதையாம்
இன்றைய இளசுகளின் பேச்சிது!
இப்படித் தான் பாரும்
முன்னோரின் பெறுமதி அறியாமலே
இந்நாளில் நம்மாளுகள்
பட்டம் பறக்குமாப் போல
தங்கட பெயரும் பறக்குதாம் என்கிறாங்க...
பெண்ணின் கழுத்தில் கைவைத்து
சங்கிலி அறுத்தவர் சங்கிலிமுருகனாம்...
ஆணின் தோளில் கைபோட்டவள்
ஆண்களை வீழ்த்தும் அலமேலுவாம்...
பகல் திருட்டுப் பண்ணும் இணையர்
பொன்நிலவனும் வெண்ணிலாவுமாம்...
அட, கெட்ட கேட்டுக்கு
இப்படி இன்னும் அடுக்கினால்
எனக்கும் நொட்டை சொல்லுவியளே!
நல்ல பெயரெடுக்க
நெடுநாள் எடுக்கும் பாருங்கோ...
ஆனால்,
மணித்துளிகளில் கெட்ட பெயர்
வேண்டிச் சுமக்கிறதால தான்
வானில் பறக்கிறாங்கள் போலும்!
என்ன காணும்
பொடி, பெட்டைகளே...
எப்பன் பிடரியைத் தேய்த்து
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்...
தமிழ் இலக்கணம் என்றால்
தொல்காப்பியரைக் கூப்பிடுறாங்க...
உலகிலுள்ள அத்தனை அறிவையும்
தேடிப்படிக்கத் தேடுகிறாங்க
திருக்குறள் எழுதிய வள்ளுவரை...
பட்டம் போல பறக்கும்
கெட்ட பெயருக்கு ஏது பெறுமதி?
உற்றாரும் ஊராரும் நாடும் உலகும்
உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
தொல்காப்பியரைப் போல
வள்ளுவரைப் போல
ஏதாவது செய்தாயா?
அது தான் முடியாவிட்டாலும்
அழகு தமிழில்
கம்பனைப் போல காவியம் படைத்தாயா?
சரி! அதை விடுவம்...
ஆகக்குறைந்தது
என்ன தான் நல்லது பண்ணினாய்
உனக்கென்று நற்பெயர் வந்து சேர?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரையும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!


இப்பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. இதனைக் கருத்திற் கொண்டு தங்களைத் தாக்கியதாக எவரும் எண்ண வேண்டாம்.

Wednesday 3 September 2014

தமிழரில்லாத இலங்கை

தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இயக்கம்
ஆளுக்கொரு கொடி
எத்தனையோ பிறந்து இருந்தன...
'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்லோருமே கூறி நின்றன...
பின்னர்
'தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போட்டு
அழிந்து போயின என்றோ
அழிவதற்குத் தயார் என்றோ
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
1983 ஆடிக் கலகம்
சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
எந்தெந்த நாடுகளுக்கு
ஏதிலியாகப் போகலாம் என்பதை
அறிமுகம் செய்ததா?
தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறுவதைக் கண்டு உணரலாமே!
புலிகளை அழித்ததும்
வன்முறைப் போருக்கு
முற்றுப்புள்ளி வைத்தாச்சே...
சுடுகலன் ஏந்துவோர்
எவராயினும் இருப்பின் அழிக்கப்படுவார்களே...
இன்றைய ஈழத் தமிழர்
இப்படித்தான்
முணுமுணுப்பதைக் காணலாமே!
ஈழத் தமிழரின்
முணுமுணுப்புக்குள்ளே
மறைந்திருப்பது என்ன?
தனிப் பெரும்
சிங்களத் தலைமையை ஏற்பது
நன்று என்று தானே இருக்கும்!
எப்படியாயினும்
தமிழர் நலம் பேணுவதாயின்
கட்சிகளோ இயக்கங்களோ
ஒன்றிணைய மறுத்தால் நடப்பதென்ன?
கட்சிகளாயின்
தடைபோட்டுச் செயலிழக்கச் செய்யலாமே...
இயக்கங்களாயின்
புலிகளை இல்லாது ஒழித்தது போல
அழிந்து போகச் செய்யலாமே...
அப்படியாயின்
யார் நலனை யார் பார்ப்பது?
உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழினமே
உண்மையைக் கூறுவீர்களா?
ஈழத் தமிழர் நலன் பேணாத
எந்தச் சக்தியும் இருந்தும்
பயனில்லைக் கண்டியளோ!

Tuesday 2 September 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!

Wednesday 27 August 2014

எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...

தமிழில் எழுதுறாங்கோ...
உலக மொழிகள் கலந்த
உப்பு, புளி, காரம் இல்லாத
கூட்டுக்கறி (சாம்பாரு) போல...
உயிர், மெய், உயிர்மெய் அற்ற
வெறும் எழுத்தாக எழுதுறாங்கோ...
நம்மாளுகளும் படிக்கிறாங்கோ...
படிச்ச பின் மறக்கிறாங்கோ...
உண்மைத் தமிழில் எழுதினால்
உண்ணாணத் தான்
எவர் தான் மறப்பாங்கோ...
எழுதுறாங்கோ...
எழுதுறாங்கோ - எவரும்
உண்மைத் தமிழ் அற்ற
உலக மொழிகளின் கலப்பாக
படித்தாலும் மறக்க இலகுவாக
எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...
உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
சொல்கள் உருவாக மாட்டாதே...
உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
படைப்புகள் உருவாக மாட்டாதே...
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கு
தமிழில் தீராக் காதல் - அது தான்
பிறமொழி கலந்து எழுதினால்
தமிழ் படைப்பல்ல என்கிறான்!

Tuesday 26 August 2014

சிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீர்களா?



நடப்புக் காலத்தில் காதலர்கள் பரிமாறும் பரிசுப்பொருள்கள் என்ன தெரியுமா? சிறப்பு நடைபேசி (Smart Phone) தான்! அதுபோல கீதா 'சம்சுங்' சிறப்பு நடைபேசி (Smart Phone) ஒன்றை கயனின் பிறந்த நாளில் பரிசளிக்கிறார்.

கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!

கயன்: எப்படி? எப்படி?

கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!

கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)

கீதா: எப்படி? எப்படி?

கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!

கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!

ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.

Sunday 24 August 2014

மக்களாயமே எனது பல்கலைக்கழகம்


"சமூகம்" என்பது வடசொல் - அதன்
தமிழ் வடிவம்
"மக்களாயம்" என்றே பொருள்படும்!
நான் என்றால்
மக்களாயத்தில் ஓர் உறுப்பினரே!
அதனால் தான் - என்னை
"மக்களாயத்தில் தங்கியிருக்கிறேன்" என்று
உங்களால் கூற முடிகிறதே!
நாம்
முழு நிறைவோடு(சுதந்திரமாக) வாழ
மக்களாயம் உடன்படாது என்பது
முற்றிலும் பொய்யே!
நம்மாளுகளின் ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று
காவல் செய்வது மக்களாயமே!
என்னை
எடுத்துக் கொண்டால் பாரும்...
வெற்றிலை, பாக்குப் போட்டாலென்ன
புகையிலை, சுருட்டு பற்றினாலென்ன
அழகி ஒருத்தி பின்னே சுற்றினாலென்ன
அற்ககோல்(மது) குடித்தாலென்ன
விடுதியில் கன்னியோடு களிப்புற்றாலென்ன
சிவப்பியிருக்க கறுப்பியோடு காதலித்தாலென்ன
கடைத் தெருவில் களவெடுத்தாலென்ன
பணித்தளத்தில் கையூட்டுப் பெற்றாலென்ன
எண்ணிப் பார்த்தால் - நான்
பண்ணிய கெட்டது எல்லாவற்றையுமே
நாடறியச் செய்வதும் மக்களாயமே!
பால் கடைக்கு முன்னே
பனம் கள்ளுக் குடித்ததைக் கூட
பள்ளிக்கூட ஆசிரியருக்குப் போட்டுடைத்து
பிரப்பந் தடியால அடிவேண்டித் தந்ததும்
மக்களாயமே என்றால்
மக்களாயத்தின் கண்காணிப்பு
எவ்வளவு வலுவானது என்பதை
நீங்கள் அறிவீர்கள் தானே!
நம்மூர்
மக்களாயத்திடம் சிக்காமல் தப்ப
வெளியூர் போய்
கெட்டது செய்து சிக்கியோரும்
இருக்கிறார்கள் என்றால்
ஊருக்கூர் மக்களாயம்
பலவூரை இணைத்த வலையாக இருப்பதை
எவரும் ஏற்கத்தானே வேண்டும்!
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகள் பேசிக்கொள்வதை
"நாட்டு நடப்புப் பறையினம்" என்று
நாம் இருப்போம்
ஆனால்,
அங்கே அவர்கள் பறையிறதை
காது கொடுத்துக் கேட்டால் தெரியும்
"அவள் அவனோடு ஓடிப் போயிட்டாள்"
"அவளை அவன் தூக்கிட்டுப் போயிட்டான்"
"வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தவளாச்சே"
என்றெல்லாம்
ஆளாலைப் பற்றி அலசுவரே!
இப்படித்தான் பாருங்கோ
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகளால் தான்
செய்தி வேகமாகப் பரவுகிறது என்றால்
மக்களாய வலையமைப்பின் பலம்
என்னவென்று நான் பாடுவேன்!
கெட்டதைச் சுட்டும் மக்களாயம்
குறித்த கெட்டது நிகழாமல்
வழிகாட்டலையும் மதியுரையையும்
வழங்கத் தவறுவதில்லை என்பதை
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் குழுவில் நானுமிருந்தே
நாலும் கற்றறிந்தேன்!
பட்டப் படிப்பு படிக்காத
நான் கூட
கொஞ்சம் கொஞ்சம் படித்ததை
அறிமுகம் செய்த மக்களாயம்
என்னில் பிழை பிடித்தாலும்
சரிப்படுத்தப் புகட்டிய அறிவே
என்னை அறிஞனாக்கியது என்றால்
மக்களாயமே
எனது பல்கலைக்கழகம் என்பேன்!

Wednesday 20 August 2014

தைப்பொங்கல் 2010

பொங்கலோ பொங்கல்...
கதிரவன் முகம் பார்த்து
வேளான்மை விளைச்சல்
பெற்றெடுத்த உழவர்கள்
பொங்கும் பொங்கல்!
பால் வடியும்
பானை முகம் பார்த்து
பொங்குவோர் எண்ணுவது
இம்முறை எப்பக்கம்
விளைச்சல் பெருகும் என்பதையே!
தை பிறந்தால் வழி பிறக்குமென
எம்மவர்
பொங்கல் பானை கீழிறங்க முன்னரே
கதிரவனைப் பார்த்து
நடப்பு ஆண்டு
எண்ணங்களைப் பெருக்குவரே!
கதிரவனுக்குப் பொங்கிப் படைத்ததும்
பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
நன்மைகள் பல...
நமக்குக் கிடைக்குமென நம்பியே
எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
நம்பிக்கைகள் தான்
எங்களுக்கு வழிகாட்டும்
ஒளி விளக்குகள்!
இவ்வாண்டுத் தையிலும்
நல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய
நம்பிக்கைகள் ஈடேற
உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
எம்முடன் இருப்பானென நம்புவோம்!


புலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.

Tuesday 19 August 2014

புதிதாக என்ன பண்ணுவோம்?


விடிந்தால் புதிய நாள் - அன்று
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய நாளில்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன....
அப்படியாயின், எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆளமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய நாளில்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!

Friday 15 August 2014

நல்லுறவும் நமது முடிவிலேயே...


பணத்தை வைத்தோ
படிப்பை வைத்தோ
இணையாத உறவது
அன்பை வைத்தே
அணைந்த உறவிலேயே...
விரிசல் வந்தால் போதுமே
நல்லுறவும் கெட்டுப் போகுமே!
உள்ளத்திலே
உண்மை அன்பிருக்க
உடனடி முடிவும்
உறவை முறிக்கலாமே...
அன்பின்றித் தொற்றிய உறவை
அன்பாக அணைத்தாலும்
நெருங்கிய உறவாகலாமே...
உறவு கெட்டுப் போகாமல்
பார்த்துக் கொண்டால் நன்றே!
நம்மவர் நல்வாழ்விலே
பழகிய உறவுகள் பாதியில் பிரியலாம்
காலம் கரைய
தவறுகள் உணரத் தேடியே வரலாம்
பழசை மறந்து - நாம்
பணிவாய் நல்லுறவைப் பேணுவோமே!
நிலையற்ற வாழ்விலே
நிலையான உறவின்மைக்கு
மனித முடிவே எதிரி...
தடுமாறும் உள்ளத்தை
தளரவிடாமல் பேணினால் தானே
உறுதியான முடிவெடுத்தே
நிலையான உறவைப் பேண இடமுண்டே!
நாம் எடுக்கின்ற
ஒவ்வொரு நல்ல முடிவிலேயும் தான்
நெடுநாள் நிலைக்கக் கூடிய
நமது உறவுகளைப் பேண முடிகிறதே!

படிப்பும் சான்றும்

"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!

Thursday 14 August 2014

நிறைவு (சுதந்திரம்) கிட்டுமா?


நான்
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!


2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.

அந்த நாள் நினைவுக்கு வர

அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால்  வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share

மக்களால் நன்கு அறியப்பட்டவனாக (பிரபலமாக)


என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை கள்ளச் சான்றிதழ் பெற்றவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது தகுதியின் படி
நேர்மையான சான்றிதல் எனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைக் கெட்டவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நல்லதைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் கள்ளன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நேர்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பெண்பிள்ளைப் பொறுக்கி என்பர்
ஆனால்
நீங்களோ
எனது கற்பைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பலரைக் காதலித்தவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனக்குக் காதலியில்லையெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பல மனைவிக்காரன் என்பர்
ஆனால்
நீங்களோ
என் மனைவி யாரெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அரசியல்வாதி என்பர்
ஆனால்
நீங்களோ
நான் மக்கள் தொண்டனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பொல்லாதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் நல்லவனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை இழிவுபடுத்துகையில் நம்பாமல்
நீங்களோ
என் சூழலைப் பகுப்பாய்வு செய்து
என் உண்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அழிக்க வருகையில்
நீங்களோ
என் உயிரைக் காத்த
என் சூழலிலிருந்த பொதுமக்களே!
எதிரிகளுக்குத் தெரியாதது
சான்று காட்டியே
இழிவுபடுத்த வேண்டுமென்று...
அதனாலன்றோ
என்னை
நீங்கள் பகுப்பாய்வு செய்ய முடிந்ததே
இதனாலன்றோ
உங்களுக்குள்ளே - நான்
அறிமுகமாக முடிந்திருக்கிறதே!
மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
நான்
மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
எப்ப தான்
எதிரிகள் படிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!

Sunday 10 August 2014

புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்


வருவார் போவார் பழகுவார் பிரிவார்
நம்மவர் பிறவிச் செயலே!
தருவார் கேட்பார் கொடுப்பார் பெறுவார்
நம்மவர் செயலில் பாரும்!
சேருவார் விலகுவார் தேடுவார் மறைவார்
நம்மவர் தேவைகளில் தெரியும்!
சொல்வார் செய்யார் கைகுலுக்குவார் தோள்கொடுக்கார்
நம்மவர் ஒற்றுமையில் புரியும்!
அழுவார் வெறுப்பார் துடிப்பார் துன்புறுவார்
நம்மவர் வினைப்பயன் அறுவடையிலே!
புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
"உதவி செய் பலனை எதிர்பார்க்காதே" என்பது
இறைவன் ஏட்டினிலே...
"உதவி செய்திருந்தால் பலன் கிட்டும்" என்பது
மனிதன் வீட்டினிலே...
செயலில் தேவைகளில் ஒற்றுமையில் முடிவுகளில்
சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின்
எம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!

Saturday 9 August 2014

பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்ன?


2014 ஐப்பசி 07 இல் எனக்கு நாற்பத்தாறாம் பிறந்த நாள். எல்லோருக்கும் இப்படிப் பிறந்த நாள் வருமே! இந்நாளில் ஆளுக்கு ஒவ்வொரு சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். உங்கள் பிறந்த நாளன்றும் நீங்கள் எதைத் தொடருவதாகவோ எதைக் கைவிடுவதாகவோ எண்ணியுள்ளீர்கள். உங்கள் பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்னவென்பதை வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!

1. எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென (தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
2. பகையைத் தோற்றுவிக்காமல் நல்லுறவைப் (குடும்பம், நட்பு) பேணுதல்.
3. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குதல். சேமிப்புப் பழக்கத்தைக் (குடும்பம் மேம்பட) கடைப்பிடித்தல்.
4. பிறமொழிக் கலப்பின்றித் (தாய் மொழி மேம்பட) தமிழைப் பேசி வழக்கப்படுத்துதல்.
5. புகைத்தல், மது(குடித்தல்), விலை மகளை நாடுதல் போன்ற கெட்ட பழக்கமுள்ளோரைச் (தாய்நாடு மேம்பட) சீர் திருத்துதல்.
6. எமக்கு மேலதிகமாகவுள்ளதை (தனக்குப் பின் தானம்) ஏழைகளுக்கு வழங்கி உதவுதல். எமக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றியாக இதனைப் பின்பற்றலாம்.
7. மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது (சுயநலமாக...).
8. எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் (Master Plans) எனக்கில்லை (முட்டாளாக...).

என் பிறந்த நாளில் இப்படிச் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு
செயலில் இறங்கி நல்ல மனிதராகலாம் என எண்ணினேன்.
தங்கள் பிறந்த நாளிலும் எத்தனையோ சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டுப் புதிய அகவையில் நல்ல மனிதராக எண்ணியிருப்பியள். அவற்றைப் பாருங்கோ நம்ம வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!

தண்ணீருக்கும் தமிழனுக்கும் போரா?

ஈழத்தில் புலிகள் அழிய
ஈழத்தில் தமிழர் நசுங்க
ஈழம் சிங்களவருடையதாக மாறிட
திருகோணமலை மாவிலாறு தண்ணீர் தான்
காரணமாயிற்றோ என்றால்
தொப்புள் கொடி உறவாம்
தமிழகத் தமிழரையும் பதம் பார்க்க
காவிரி ஆற்றுத் தண்ணீர் தான்
தலையிடி என்றால்
முல்லைப் பெரியாற்றுத் தண்ணீரும்
முரண்பட்டு நிற்க
பாலாற்றுத் தண்ணீரும்
பிரிந்து போக நினைக்கிறதே!
தொப்புள் கொடி உறவுகளே
தண்ணீரும் தேவை
இந்தியாவின் தலைநிமிர்வும் தேவை
ஆனாலும்
தமிழன் அழிவதற்கு இடமின்றி
தமிழ்நாடு மேன்மையுற
நல்ல தீர்வு ஒன்றைக் காணாவிட்டால்
தண்ணீருக்கும் தமிழனுக்கும் போர் தானே!

Friday 8 August 2014

காதலில் இரண்டு வகை


மணமுடித்ததும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே காதல் மலர வேண்டும். மணமான ஆண்துணை, பெண்துணை இருவரும் காதல் கொள்வதாலேயே உளவியல், பாலியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடிகிறது.

மணமாகாத இருவர் காதல் கொள்வதாலே மணமுடிக்க முன் பழகியதாலே மணமுடித்த பின் மணவாழ்வில் சிக்கல் வராது என்பது பொய். ஏனெனில் அன்பு அதிகமானதால் வந்த காதல், மணமுடித்த பின் இருக்க வேண்டிய தேவைகளை அறிந்திருக்காது.

மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்தவர்களிடையே "இதற்காகவா காதலித்தாய்?" எனச் சில சூழலில் மோதல் வரலாம். ஆனால், மணமுடித்த பின் காதலிப்பவர்களிடயே நல்ல குடும்பமாக இருப்பதற்கு எல்லாம் தேவை என மோதிக்கொள்ள வாய்ப்பில்லை.

ஆயினும், நான் கூறும் கருத்தையே பொய்யாக்கும் வண்ணம் மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்த பின் மகிழ்வோடு சிலர் வாழ்கிறார்கள்.

எடுத்துக்காட்டாகத் தொழில் நிறுவனமொன்றில் நல்ல நட்போடு ஐந்தாண்டுகளாகப் பழகிய இருவரிடையே, இருவரும் மணமுடித்தால் நல்லாயிருப்பியள் என மாற்றார் தூண்டுதலினால் காதலித்து இன்றும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். அவர்களிடயே மலர்ந்த காதலில் "மணமுடித்த பின் இவ்வாறு வாழலாம்" என்ற குறிக்கோள் இருந்திருக்கிறது.

முடிவாகச் சொல்வதானால் காதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அன்பு அதிகமானதால் வந்த உணர்ச்சியால் தோன்றியது. மற்றையது நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட இரு உள்ளங்களில் தோன்றிய காதல்.
முதலாம் காதல் இலக்கற்றது, இலக்குக்குறித்தது இரண்ணடாவது காதல். காதலில் எந்த வகை நல்லதோ, அது மணவாழ்வை முறிக்காது.
பள்ளிக் காதல் படலை வரையும் அகவைக்கு(21 வயதுக்குப் பிந்திய) வந்த பின் பொறுப்புணர்ந்தவர் புரிந்த காதல் ஆயுள் வரை தொடருமே!

காதல் பற்றிய மேலதீகத் தகவலுக்கு:
உளவியல் நோக்கில் காதல்

முல்லைப் பெரியார் அணை

நாங்கள் இந்தியர்கள்
நமக்குள்ளே தமிழ்நாடு, கேரளாவா
இடையிலே தலையை நீட்டும்
முல்லைப் பெரியார் அணை
தமிழ்நாட்டாரையும், கேரளாவாரையும்
பிரிப்பதற்கென்றே நீண்டதா?
அப்படியாயின்
தமிழ்நாட்டாரும், கேரளாவாரும்
இந்தியர்கள் இல்லையா?
மாநிலங்களுக்குள் மோதல் என்றால்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான்
கொண்டாட்டம் என்பதை அறிவீரா?
பாகிஸ்தான்-ஜம்முகஸ்மீர்
சீனா-தீபெத் இந்திய எல்லை
மோதல்களைத் தூண்டவா
மாநிலங்களுக்குள் மோதல்?
முதலில்
இந்திய வல்லரசைக் கட்டியெழுப்புவோம்
இரண்டாவதாக
காவிரி நீரைப்போல எல்லா நதிகளையும்
சமபங்கீடாய்ப் பாவிக்கலாம் வாருங்களேன்!



Wednesday 6 August 2014

காதலி, காதலன் நினைவாக...

முதலாம் சந்திப்பு:-
ஆண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

இரண்டாம் சந்திப்பு:-
பெண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

மூன்றாம் சந்திப்பு:-
நானே ஒரு பெரியவரிடம் : காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?

பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.

நான்காம் சந்திப்பு:-
"காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?" என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

நகைச்சுவையாக உங்கள் பதிலைத் தாருங்களேன்.

நான் பார்க்குமிடமெங்கும் உண்மைக் காதலைக் காணவில்லை. ஆகையால், இப்படியான கேள்வி அம்புகளை நீட்டுகிறேன்.

Tuesday 5 August 2014

தாஜ்மகாலைப் பற்றிப் படித்ததில்...

http://wp.me/pTOfc-b1
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!


காதல் நினைவுப் பரிசாக
இளவரசி மும்தாஜ்ஜிற்காக
மன்னன் சாஜகான் கட்டிய
தாஜ்மகாலிற்குப் பின்னேயுள்ள
துயரம் நிறைந்த கதைகளை
உள்ளத்தில் மீட்டுப் பார்த்தால்
ஜமுனை நதி போல
எங்கள் கண்ணீரல்லவா ஓடும்!
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பிக்குப் பாராட்டு விழா நிகழ்வாம்...
ஊரே திரண்டு எழுந்து வர...
இசை முழக்கம் வானைப் பிளக்க...
வரவழைக்கப்பட்ட சிற்பி
மன்னன் சாஜகானைக் கைகூப்பி வணங்க...
மன்னன் சாஜகானோ
தன் உடைவாளைக் கழட்டினான்...
ஓங்கியே ஒரு வெட்டுப் போட்டான்...
கூப்பிய சிற்பியின் இரு கைகளும்
துண்டாகக் கீழே விழுந்தன...
வானதிரக் குளறிய வண்ணம்
நிலத்தில் விழுந்து
புரண்டு உருண்ட சிற்பியை
"வெளியே அழைத்துச் செல்" என
பணியாள்களுக்குக் கட்டளையுமிட்டான்...
இதற்கு மேலேயும்
"தாஜ்மகாலைப் போல
இன்னொன்று முளைக்கக் கூடாது" என்றே
சிற்பியின் கைகளை வெட்டியதாகவும்
சாஜகான் உரைத்தும் உள்ளானே!
இந்தத் துன்பச் செய்தியை
யாழ் வலம்புரிப் பத்திரிகையில் படித்ததும்
எனக்கு வெறுப்புத் தான் வந்ததே!
இளவரசி மும்தாஜைப் பிரிந்த
மன்னன் சாஜகான் மும்தாஜிற்காக
தன் காதல் பரிசாக
"உலகை ஈர்க்கும் வண்ணம்
புனித நினைவிடத்தை வரைந்து தா" என
பணியாளன் ஒருவரிடம் பணித்தானாம்!
ஏதுமறியாப் பணியாளன்
அரச கட்டளைக்குப் பணிந்தே
படம் வரையும் பணியில் இறங்க
துணைக்கொரு தோழியையும் நாடினான்!
படம்வரை கலைஞனுக்குத் தோழியும் உதவ
இருவரும் மாத விடுமுறையில்
ஜமுனை நோக்கியே நடைபோட்டனர்...
காதல் நினைவகம் வரைய - காதலில்
தோற்றவனாலேயே முடியுமென உணர்ந்தே
பணியாளனின் தோழி
பணியாளன் மீது காதல் கொண்டாளே...
இன்பமாகக் காதல் செய்தே
இருவரும் காலம் கடத்த
வரைபடம் கொடுக்க வேண்டிய
நாளும் நெருங்கி வரவே
பணியாளனின் தோழி ஜமுனையில் விழுந்து
காதல் மூச்சை நிறுத்திக் கொண்டாளே!
"உதவி செய்யத் துணைக்கு வந்தவள்
உள்ளத்தை அன்பாலே தடவியவள்
ஜமுனைக்கு உணவானாளே" என
படம்வரை பணியாளன் துயருற - அவன்
துயர் யாரறிவார் - அதுவே
நிழல் கூட விழுந்திடாத
சலவைக் கல்லால் ஆன
தாஜ்மகால் வரைந்திடத் துணையாயிற்றாமே!
தன்னை நினைத்து வடிக்கும் வரைபடம்
நன்றாக அமையுமென்றே
விழுந்தவளின் துயரைச் சுமப்பதாலேயே
சிரித்துக் கொண்டே ஓடும்
இந்திய நதிகளிலே ஜமுனை மட்டும்
அழுது கொண்டே ஓடுகிறதாம்!
இந்தத் துயரச் செய்தியை
பாவலர் பழனிபாரதியின் நூலொன்றிலும்
பழனிபாரதி எழுதியதாகப் பத்திரிகையிலும்
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
முதலாம் துன்பச் செய்தியும்
இரண்டாம் துயரச் செய்தியும்
மூன்றாம் ஆளாகிய
என் உள்ளத்தைக் குத்தியதாலே
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
காதலின் நினைவிடமான
தாஜ்மகாலுக்கு;
இரு காதல் இணைகளா?
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பியின் இரு கைகளா?
ஒரு தாஜ்மகாலுக்குப் பின்னாலே
இன்னும் எத்தனை
துன்ப, துயரச் செய்திகள் இருக்குமோ
நானறியேன் நண்பர்களே!
--------------------------------------------------------------------
நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த தாஜ்மகாலுக்குப் பின்னாலே உள்ள துன்ப, துயரக் கதைகளை பாடல்களாகவோ கவிதைகளாகவோ கதைகளாகவோ புனைந்து இப்பகுதியில் எடுத்துக் கூற முன்வாருங்களேன்.

தற்கொலையா?


ஒருவன்
ஒருத்தியை விரும்புகிறான்...
ஒருத்தி
ஒருவனை விரும்புகிறாள்...
காலமாற்றம்
பிரிவைத் தர
தற்கொலையை நாடலாமா?
நீங்கள்
காதலுக்காகப் பிறக்கவில்லை
காதல் தான்
உங்களுடன் விளையாடியது
அதில்
தோற்றதினால்
அடுத்தவர்
உள்ளத்தை அறிய முடிந்ததே!
உள்ளமும் உள்ளமும்
இணையாமையால்
தற்கொலை தீர்வாகாதே...
தற்கொலையை நாடாமல்
வாழ்ந்து காட்டு
அதுவே
காதலைத் தோற்கடிக்குமே!

Friday 1 August 2014

தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!

உலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களும் உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணக் களமிறங்கியவர்களே! உண்மையில் இத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களையும் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைக்கின்றார்.

ரூபனின் வலைப்பூவில் "தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 (http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html) " என்ற தலைப்பில் வெளியான பதிவை எல்லோரும் படித்திருப்பீர்கள். சிறந்த போட்டி நுட்பம் அதாவது சிறந்த பாவலரை/கவிஞரை அடையாளப்படுத்தும் போட்டி, மிகப் பெரும் புலமை மிக்க நடுவர்கள், பலமுறை போட்டிகள்      நடாத்தி பட்டறிவு (அனுபவம்) பெற்ற ரூபன் குழுவினர் நடாத்துகின்றனர். இந்நிலையில் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைப்பதில் தவறேதும் உண்டோ?!

என்னத்தைப் பண்ணிக் கிழிக்கலாமென்று
போரென்றால் போரென்று
யாழ்பாவாணன் அழைக்கின்றாரென்று
நீங்கள் கேட்கலாம்.
நானே சொல்லிவிடுகின்றேன்.

போட்டிகள் என்பது - சிறந்த
காட்டிகள் என்பேன் - அந்த
புலமைசாலிகள் யாரென்று
காட்டி நிற்கும் செயலே
போட்டிகள் என்பேன்!

வாருங்கள்... போராடுங்கள்...
உங்கள்
தமிழறிவை வெளிப்படுத்தி
பாப்புனையும் ஆற்றலை
முன்வைத்து வெளியிடுங்களேன்!

போரென்று முழங்கி
போட்டியில் பங்கெடு என்பதா?
போட்டியில் பங்கெடுத்தாலே
போர் தொடங்கியாச்சே!
ஆனால்,
வலுவான போரில்லையே!

ரூபன் குழுவினர் நடாத்தும் போட்டி என்றால் எல்லோரும் பங்கெடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பதிவின் தொடக்கத்தில் சுட்டிய பன்னீராயிரம் வலைப்பதிவர்களும் இப்போட்டியில் பங்கெடுத்தால் போரென்றால் போர் தான்! கீழ்வரும் இணைப்புகளை உங்கள் வலைப்பூக்களிலும் இணைத்து தீபாவளி (2014) நாளில் மாபெரும் அந்தக் கவிதைப் போரை ஏற்படுத்த எல்லோரும் ஒன்றிணைவோம்.

உங்கள் வலைப்பூக்களில் பக்கப்பட்டையில் (Sidebar) இணைக்கக் கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqgbY5b-0UxfaeHml9PVh7btpJ9a9EgfZPHUwmjhvm3sq0McdpP8ocMR18rAGkv_misOLyxd0uQGa5iO1DIlzuTFcMo_NVuzg2FFIgQcpH2ZNLRECtPlZZ21bvlf1RkrNvyKKuVithDMPz/s1600/Untitled-1+copy.jpg" height="160" width="200">
</a>

உங்கள் வலைப்பூக்களில் பதிவுப்பகுதியில் (Posting) அறிமுகம் செய்ய கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqgbY5b-0UxfaeHml9PVh7btpJ9a9EgfZPHUwmjhvm3sq0McdpP8ocMR18rAGkv_misOLyxd0uQGa5iO1DIlzuTFcMo_NVuzg2FFIgQcpH2ZNLRECtPlZZ21bvlf1RkrNvyKKuVithDMPz/s1600/Untitled-1+copy.jpg" height="400" width="480">
</a>

எல்லோரும் போட்டியில் பங்கெடுப்போம். பல்லாயிரம் வலைப்பதிவர்களைப் போட்டியில் பங்கெடுக்கச் செய்து; தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போரை ஏற்படுத்த முன்வாருங்கள்!


Thursday 31 July 2014

விலை மகளுக்கு இலை போடாதீர்


போக்குவரவு என்றால்
தடைகள் ஆயிரம் வரலாம்
அதுபோலத் தான்
வாழ்க்கையிலும்
ஆயிரம் தடைகள் வந்து மோதலாம்!
தடைகளைக் கடந்தால் தான்
போக்குவரவும் இடம்பெறுவது போல
வாழ்க்கையிலும்
எதிர்ப்படும் தடைகளைக் கடக்கவேணுமே!
தடைகளைக் கடக்க முடியாது போனால்
தடைகளுக்குள்ளேயே
முடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே!
தடைகளைக் கடக்க முடியா விட்டாலும்
முடிந்தவரை முயன்றும்
தடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்
சாகவேண்டுமே தவிர
விலை மகனாகவோ
விலை மகளாகவோ முடியாதே!
விலை மகனாரை விட
விலை மகளாரே நாட்டிலே அதிகம்...
ஆணென்றால்
எந்தத் தொழிலையையும் செய்யலாமென்றால்
சரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்
எந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென
கழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா?
எவர் வாய்க் கேட்பினும்
எவர் தான் எப்படிச் சொன்னாலும்
பெண் பக்கம் தவறு என்றால்
அவளை
ஊரே ஒதுக்கி வைப்பதால் தான்
கோழைப் பெண்கள்
தெருக்கோடியில் விலைமகளாக
அலைவதைப் பார்க்க முடிகிறதே!
கோழைப் பெண்களே
உங்கள் தொழில் உறுப்புக்கு
பொன்(தங்க) நகை அணியும் வழக்கம்
(பழைய இலக்கியங்கள் கூறுகிறது)
ஏன் இருந்தது தெரியுமா?
வாடகைக்கு விடுவதற்கல்ல
வழித்தோன்றலைத் தருவிக்கவென்றே
உங்கள் புனித உறுப்பைப் பேணவே!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே
சொல்லப்பட்டது...
ஆனால்
ஆளுக்காள் தவறிழைத்த பின்
பெண் மீது பழி போடலாமோ?
ஆண் சிங்கங்களே
ஆண்மையை அடக்கியாள முடியாமல்
தெருக்கோடி விலைமகளை நாடி
பாலியல் நோயை மட்டுமல்ல
குடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ?
போதாக்குறைக்கு
மாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா?
இவை தானா
ஆண் சிங்கங்களின் ஆண்மை!
பெண்ணைப் பெற்றவர்களே
சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்...
உங்கள்
குலமகள் தவறிழைத்தால்
சீர் திருத்தி வாழவையுங்களேன்...
தவறிழைத்த குலமகளை
நீங்கள்
ஒதுக்கி வைப்பதால் தானே
விலை மகளாகப் புறப்படுகிறாளே...
சீர் திருத்தியும்
குலமகளாக வாழாத
விலை மகளுக்கு இலை போடாதீர் - அது
எம்மைப் படைத்த ஆண்டவனுக்கே
பிடிக்காத ஒன்றே!
கழிவுறுப்பு வாடகைக்கு விடும்
தொழிலை ஒழிக்க
பெண்ணைப் பெற்றவர்கள்
விலை மகளுக்கு இலை போடா விட்டாலும்
ஆளாளுக்கு ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றினால்
நாளாக நாளாக
என் மகளும் விலை மகளாகாள்
நாடெங்கிலும் உள்ள
விலை மகளும் குலமகளாவாளே!

ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?


கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.

 நகைச்சுவைக் கதை
 துப்பறியும் கதை
 வரலாற்றுக் கதை
 அரசர் கதை
 இறைபக்திக் கதை
 சண்டைக் கதை
 சதை காட்டும் ஆடல் கதை
 இசையும் பாடலும் கூடிய கதை
 பிறமொழிப் படக்கதை
 கருவற்ற கதை(மாசாலா)

இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.

Wednesday 30 July 2014

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

ஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...

நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?

சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!

சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...

Tuesday 29 July 2014

வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்

முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!

பணம் பத்தும் செய்கிறது

வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!

2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.

Sunday 27 July 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

Saturday 26 July 2014

வேலிகள்

எனக்கும் விருப்பம் தான்
வேளைக்கே செத்துவிடத்தான்
ஆனால்,
படைத்தவன் தான்
இன்னும்
என்னை அழிக்க முன்வரவில்லை!
எனக்கும் விருப்பம் தான்
அடிக்கடி தவறுகளைச் செய்துவிட
மக்களாயம்(சமூகம்) தான்
ஊசிக் கண்ணால உற்று நோக்குதே...
சரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)
ஏதாச்சும் செய்யலாம் தான்
தவறு செய்யத் தெரிந்தாலும்
பிடிபடாமல் இருக்கத் தெரியாதே!
எனக்கும் விருப்பம் தான்
தலைவனாகத் தான்
ஆனால்,
முன்னுக்குப் போய்
முகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்
இன்னும்
தொண்டனாகவே இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
நாட்டை ஆளத்தான்
நான் ஆட்சிக்கு வந்தால்
எல்லோருக்கும்
சம உரிமை கிடத்தாலும் என்றே
முதலாளிகள் எதிர்ப்பதால் தான்
ஊருக்குள்ளே,
வீட்டிற்குள்ளே,
வீட்டு மூலைக்குள்ளே
முடங்கி இருக்கிறேனே!
எனக்கும் விருப்பம் தான்
வானில் உலாவும் பகலவனைப் போல
உலகை ஆளத்தான்
நான் உலகை ஆண்டால்
எல்லா நாடுகளும்
சம வளம் பெற நேர்ந்தால்
தங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே
தாய் நாட்டில்
எனக்கு
வீட்டுக்காவல் போட நினைப்பது
வல்லரசுகள் ஆயிற்றே!
எனக்கும் விருப்பம் தான்
சூழவுள்ள மக்களுக்கு
நல்லது செய்யத் தான்
ஆனால்,
சுவாமி விவேகானந்தர் சொன்னார்
"உன்னைத் திருத்திக் கொள்
சூழவுள்ள மக்கள்
தாமாகவே திருந்துவார்கள்" என்றே
என்றாலும்
என்னைத் திருத்தப் பார்க்கிறேன்
இன்னும் முடியவில்லையே!
எல்லோருக்கும் விருப்பம் தான்
எல்லாமும் செய்யத் தான்
என்றாலும் பாருங்கோ
சாட்டுகளைப் பொறுக்கி
சறுக்கப் பல ஆளுங்க...
உயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே
எல்லாமும் செய்திட
முன்னிற்பவர் சில ஆளுங்க...
இப்படித் தான்
நம்மாளுங்க இருந்தால்
எப்படித் தான்
நம்ம வீடும் நாடும் உலகும்
மேம்பட்டு அமைதிக்குத் திரும்பும்...
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!